கொரோனா வைரஸ் பரவியது எப்படி என்பது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்
சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி உள்ளது. இதனால் கொத்து, கொத்தாக மக்கள் மரணமடைந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள நுண்ணுயிரி ஆய்வகத்தில் இருந்துதான் பரவியது என்று பல ஆய்வாளர்கள் உள்பட பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆனால், சீனா இதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சீனாவில் சர்வதேச குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தினர். மேலும், அமெரிக்க இதுபற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தது.
சீனாவில் இருந்துதான் வைரஸ் பரவியது என்று கண்டறியப்பட்டால், சீனா அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.மேலும், ஐரோப்பிய யூனியனும் சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.ஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. மக்களிடம் பொய்களை சொல்லி தவறாக வழி நடத்துவது மிகவும் ஆபத்தானது. இது நோய் பரப்பும் வைரஸை விட மிக ஆபத்தானது என்று கூறியுள்ளது.
சீன அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறும் போது அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகத்தின் மக்களின் அக்கறைக்கு அமெரிக்கா பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். விசாரணைக்கு உதவ உலக சுகாதார அமைப்பையும் அழைக்கலாம் என்று கூறினார்.