14 நாட்களாக 85 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தாக்குதல் இல்லை – குணம் அடையும் விகிதமும் உயர்வு

Spread the love

14 நாட்களாக 85 மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குணம் அடையும் விகிதமும் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் நிலவரம் குறித்து டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது நாட்டில் 16 மாவட்டங்களில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை.

இந்த பட்டியலில் இன்று (நேற்று) மேலும் 3 மாவட்டங்கள் சேர்ந்துள்ளன. அந்த மாவட்டங்கள், மராட்டியம்,கர்நாடகம்,பீகார் ஆகும். இதனால் 16 என்ற எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

14 நாட்களாக நாட்டின் 85 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்குதல் இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,396 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதன்மூலம் மொத்தம் தாக்குதலுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 892 ஆக உயர்ந்துள்ளது. 20 ஆயிரத்து 835 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோன்று கொரோனா தாக்குதலில் சிகிச்சைக்குப் பின்னர் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில், 381 ஆக உள்ளது. இதன்மூலம் இந்த தொற்று நோயில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 6,184 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைந்தோர் விகிதாசாரமும் 22.17 சதவீதமாக உயர்ந்துள்ளது.

முதல்-மந்திரிகளுடனான கலந்துரையாடலின்போது, சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கொரோனா வைரஸ் பரவுதல் சங்கலியை உடைக்க வேண்டும் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். பச்சை மண்டலத்தில் புதிதாக ஒருவருக்கு கூட பாதுகாத்து விடாமல் இருக்க மாவட்ட நிர்வாகங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாம் நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறோம். நோயாளியுடன் அல்ல.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்வரிசையில் நின்று போராடுகிறவர்களையும், குணம் அடைந்தவர்களையும் களங்கப்படுத்தக்கூடாது. அப்படி செய்கிறபோது நோயாளிகள் ஒளிந்து கொள்வார்கள். சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் போய்விடும். இது நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்துக்கும், ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். தவறான தகவல்களை பரப்பி பீதியையும் ஏற்படுத்தக்கூடாது.

முன்வரிசையில் நின்று பணியாற்றிக்கொண்டிருக்கிறவர்கள்தான் நம்மை காக்கிறார்கள். அவர்கள்தான் சாம்பியன்கள். அவர்கள் சுயநலமின்றி, ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காக்க உழைக்கிறார்கள். சமூகத்துக்காக தங்கள் சொந்த வாழ்க்கையையே பணயம் வைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே மத்திய உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா டெல்லியில் நிருபர்களிடையே பேசும்போது, “நாட்டில் 80 சதவீத கோதுமை அறுவடை முடிந்து விட்டது. 2,000 மொத்த சந்தைகள் செயல்பாட்டில் உள்ளன” என கூறினார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்புறுதி திட்டத்தின்கீழ் 2 கோடிக்கும் அதிகமானோர் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page