தமிழக அரசு வாங்கியுள்ள 24 ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’களும் திரும்பி அனுப்பப்படுவதால் எந்தவொரு செலவும் கிடையாது என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.
சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்று உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது. இந்நோய் தொற்றில் இருந்து மக்களை காத்து, உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை மேற்கொள்ள உலகமே போட்டிப்போட்டுக் கொண்டு துரித பரிசோதனை கருவிகளை அதிக அளவில் வாங்க முயற்சித்து கொண்டு இருந்த தருணத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தன்னுடைய 2-4-2020 தேதியிட்ட ஆணையில், ரேபிட் டெஸ்ட் செய்யப்படுவதற்கு அனுமதி அளித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவ சோதனை கருவிகளை தர ஆய்வு செய்து ‘ரேபிட் டெஸ்ட் கிட்’களை எங்கே வாங்கலாம், யாரிடம் வாங்கலாம், என்பதை முடிவு செய்து அதனை மாநில அரசுகளுக்கு அறிவுரையாக வழங்கியது.
இதை வாங்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 7 நிறுவனங்களை தெரிவு செய்து பட்டியலிட்டுள்ளது. இந்த கிட்களை விற்பனை செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டது. இதில் உள்ள ஒன்ட்போ நிறுவனம், இந்தியாவில் இப்பொருள்களை விற்பனை செய்வதற்காக, கேன்டில்லா பார்மா மற்றும் மேட்ரிக்ஸ் லேப் என்ற இரு நிறுவனங்களை இறக்குமதி ஏஜெண்டுகளாக நியமித்தது. இந்த இரு நிறுவனங்களும், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் பல விற்பனை நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளன. இவற்றுள் ஆர்க் பார்மாசூட்டிக்கல், சான் பயோடெக், ரேர் மெட்டாபோலிக்ஸ் உள்ளிட்ட பல டீலர் நிறுவனங்களும் அடங்கும்.
மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பு 5 லட்சம் கிட்கள் வாங்க ஆர்க் டீலர் நிறுவனத்திற்கு, கிட் ஒன்றுக்கு வரிகள் நீங்கலாக ரூ.600 என்ற விலையில் கொள்முதல் செய்வதற்காக ஆணைகளை வழங்கியது. இதன் அடிப்படையில் மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதியளித்த அதே நிறுவனத்தின் கிட்களுக்கு, மத்திய அரசு அளித்த அதே விலையில் சான் பயோடெக் என்ற ஒரு டீலர் நிறுவனத்திற்கு, தமிழக அரசு கொள்முதல் ஆணைகளை வழங்கியது.
மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைப்பின் அனுமதி, குறிப்பிட்ட மருத்துவப் பொருட்களுக்கான அனுமதி ஆகும். எனவே, இதில் கிட்களை உற்பத்தி செய்யும் ஒன்ட்போ நிறுவனத்தின் பெயர் மட்டும் இருக்கும். இம்போர்ட்டர் மற்றும் டீலர் நிறுவனங்களின் பெயர் எப்போதும் இடம் பெறாது. இதனை கூட புரிந்துகொள்ளாமல், சான் பயோடெக் நிறுவனத்தின் பெயர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பட்டியலில் இல்லை எனக்கூறுவது அபத்தமானது.
அப்படிப்பார்த்தால், இந்தியாவில் எந்தவொரு மாநிலம் வாங்கிய எந்தவொரு டீலர் நிறுவனத்தின் பெயரும் அந்தப் பட்டியலில் இருக்காது. ஏனென்றால், ஒன்ட்போ நிறுவனத்தின் கிட்களை இறக்குமதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட 2 இம்போர்டர் நிறுவனங்களின் டீலர் மட்டும் தான் இந்த கிட்களை கொள்முதல் செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், பிற மாநில அரசுகளும் டீலர் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் தான் இந்த கிட்களை கொள்முதல் செய்துள்ளன. ஒரு சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமலேயே, அவசர கோலத்தில் அறிக்கையை அள்ளித்தெளிக்கும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு பெற்றுள்ள 24 ஆயிரம் கிட்களும் திருப்பி அனுப்பப்படுகிறது. எனவே, இதில் தமிழ்நாடு அரசுக்கு எந்தவொரு செலவினமும் ஏற்படவில்லை. இதுதவிர, எஞ்சியுள்ள அனைத்து கொள்முதல் ஆணைகளும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆணையின்படி ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்மை இவ்வாறு இருக்க, மக்களின் பொதுச்சொத்தான கருவூலத்தைக் கரையான் அரிக்கும் காரியம் என கூறியிருப்பது ஒரு பொய் பிரசாரத்தின் வெளிப்பாடு ஆகும்.
மேலும், மக்களின் உயிர் காக்கும் அ.தி.மு.க. அரசை ரூ.600-க்கு கொடுத்தது ஏன் என மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டுள்ளது, மிகவும் விந்தையாக உள்ளது. இந்தப் பொய்ப் பிரசாரங்கள் தமிழ்நாடு அரசின் மீது சேற்றை வாரி இறைக்க மட்டுமே பயன்படுமே தவிர, போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய்த் தொற்றை அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசின் உத்வேகத்தை ஒருநாளும் குறைக்க இயலாது.
மேலும், தமிழ்நாடு அரசு தான் தேவையான அனைத்து மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் முறைப்படி கொள்முதல் செய்து, மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்கி வருகின்றது. அதனால் தான் இன்றைக்கு கொரோனா நோயில் இருந்து பூரண குணமாகி வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை, அதாவது 56.8 சதவீதம் நபர்கள் குணமாகி வீடு திரும்புவது நாட்டிலேயே மிக அதிகமாக உள்ளது.
போர்க்கால அடிப்படையில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாடு அரசின் மீது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக அரசியல் விளம்பரத்திற்காக அறிக்கை போர் நடத்த உகந்த நேரமா இது என்பதை அரசியல் கட்சிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். அரசின் மீது தொடர்ந்து உள்நோக்கத்துடன் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அரசியல் லாபம் அடைய முயற்சி மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.