ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்துக்கு நேரடி விற்பனை

Spread the love

சென்னை, ஏப்.27–

ஜோதிகா நடித்திருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை ஒரு பிரபல இணையதளம் நேரடியாக வாங்கி வெளியிட இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒரு பக்கம் வரவேற்பு – மறுபக்கம் எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சை உருவாகி இருக்கிறது.

‘‘படத்தை இணையதளத்தில் வெளியிடுவது தொழில் தர்மத்துக்கு விரோதமானது’’ என்று தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் அதே நேரம் தயாரிப்பாளர்களோ, இப்புதிய முயற்சியை வரவேற்க வேண்டும் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்கள்.

ஜோதிகா கதாநாயகியாக நடித்து, ஜே.ஜே.பிரடரிக் என்ற புது டைரக்டர் இயக்கியுள்ள படம், ‘பொன்மகள் வந்தாள்’. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளிப்போய் இருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’ படம், ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தை ஒரு இணையதள நிறுவனம் ரூ.9 கோடி கொடுத்து வாங்கி, இணையதளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. இதற்கு திரையுலகில் வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இணையதளம் வாங்கியிருப்பதை வரவேற்று பாரதிராஜா தலைமையில் 30 பேருக்கும் மேல் இணைந்து ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

‘‘திரைப்பட தயாரிப்பு அதிகம் ‘ரிஸ்க்’ உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை. அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள்.

இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-, இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். ஹிந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள் குறையும்

இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும். இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்க கோர வேண்டும்.

தன்னிச்சை முடிவு வேண்டாம்

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும்,

முடிவுகளை எடுக்க வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.

இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

இயக்குனர் பாரதிராஜா, டி.ஜி. தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், கே.ராஜன், கே.இ.ஞானவேல் ராஜா, எச்.முரளி, கே.விஜயகுமார், சித்ரா லக்ஷ்மணன், எஸ்.எஸ்.துரைராஜ், பெப்சி சிவா, ஒய் நாட்ஸ். சஷிகாந்த், ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, ராஜசேகர் பாண்டியன், ஜெ.எஸ்.கே. சதீஷ்குமார், சி.வி. குமார், சுதன் சுந்தரம், சுரேஷ் காமாட்சி, இயக்குனர் மனோபாலா, எஸ்.நந்தகோபால், ஆரா சினிமாஸ் மகேஷ், ஆர்.கே.சுரேஷ், வினோத் குமார், பி.எஸ்.ரகுநாதன், லிப்ரா ரவீந்தரன், பி.ரங்கநாதன், எம்.எஸ். முருகராஜ், டாக்டர் பிரபு திலக், ‘கின்னஸ்’ பாபு கணேஷ் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

திரையரங்கு அதிபர்கள் சங்கம்

இந்த பிரச்சினை தொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறியதாவது:-

‘பொன்மகள் வந்தாள்’ படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாக வந்த தகவல் கேட்டு தியேட்டர் அதிபர்கள் அதிர்ச்சி அடைந்தோம். திரையரங்குகளில் திரையிடுவதற்கு முன்பு இணையதளத்தில் வெளியிடுவது தொழில் தர்மத்துக்கு விரோதமானது. படத்தை அப்படி வெளியிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட பட நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டோம். அதை பட நிறுவனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இணையதளத்தில் படத்தை வெளியிடுவதற்கு எங்களின் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.அந்த பட நிறுவனம் தொடர்பாக மற்ற பட நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களையும் இணையதளத்திலேயே திரையிட்டு கொள்ளட்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page