கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில் கட்டுப்பாடுகளுடன் 600க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
கோயம்பேடு மார்க்கெட்டை மாதவரம், கேளம்பாக்கம், கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்வது குறித்து நேற்று கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுடன், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், வேளாண் துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில், கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றும், மார்க்கெட்டை புறநகரில் அமைப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கோயம்பேடு மார்க்கெட்டில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது
இது மேலும் பரவும் அபாயம் உள்ளதால், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டை மாதவரம், கேளம்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யலாமா? என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். அதிகாரிகளின் யோசனைக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இந்த கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்தநிலையில், இதுகுறித்து வியாபாரிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிக்குமாறு சங்க பிரதிநிதிகளை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து மீண்டும் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில் 600க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அமைந்தகரையில் 450 சில்லறை விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
இன்று நடைபெற்ற 2 வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் முடிவை மொத்த வியாபாரிகள் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிறு மொத்த வியாபாரிகளின் இந்த முடிவுக்கு அரசு உடன்படாத நிலையில் ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை கடைகளுக்கு விடுமுறை அறிவித்தனர். மேலும், சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கடைகளை இடம் மாற்றுவதன் மூலம் போக்குவரத்து மற்றும் இடமாற்ற செலவுகள் அதிகரித்து காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் எனவே கோயம்பேடு சந்தையை இடம் மாற்றும் முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்த வியாபாரிகள் கோயம்பேடு அருகிலேயே இடம் கொடுத்து அழைத்தால் விற்பனையை தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.வியாபாரிகள் தரப்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோரிக்கை ஏற்கவில்லையென்றால் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு என தகவல் தகவல் வெளியாகி உள்ளது.கோயம்பேட்டில் உள்ள 1500 சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்படும் என அறிவித்து உள்ளனர்.