ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கோடுகள் – 6 அடி தூர இடைவெளியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன

Spread the love

சென்னை,

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் விமானங்கள், ரெயில்கள், பஸ்கள், டாக்சிகள், ஆட்டோக்கள், கார்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போய் கிடக்கிறது. குறிப்பாக இத்தனை ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவையே ஸ்தம்பித்து கிடக்கிறது.

இந்தியன் ரெயில்வே, தனது பிறந்த நாளன்று கூட ரெயில் சேவைகளை இயக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள காட்சி பொருட்கள் போலவே பணிமனைகளிலும், ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அந்தந்த ஊர்களிலேயே அகதிகள் போல இருந்து வருகிறார்கள்.

எப்போது ஊரடங்கு முடிவுக்கு வரும்? எப்போது ரெயில் சேவை தொடங்கும்? அதில் ஏறி எப்போது சொந்த ஊர்களுக்கு செல்லலாம்? இத்தனை நாட்கள் பட்ட கஷ்டம் எப்போது ஓயும்? என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு முழுமையாக முடிந்து, ரெயில் சேவை தொடங்கப்படும் பட்சத்தில் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அதற்கான பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்கள். அந்தவகையில் சென்னை எம்.ஜி. ஆர். சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட நீண்ட தூர ரெயில்கள் புறப்படும் ரெயில் நிலையங்கள், புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் 6 அடி இடைவெளியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கோடுகள் வரையப்பட்டு இருக்கிறது.

டிக்கெட் கவுண்ட்டர், பயணிகள் காத்திருப்பு இடம், நடைமேம்பாலம், பிளாட்பாரம் என ரெயில்வே வளாகம் முழுவதும் பிரதான இடங்களில் 6 அடி இடைவெளியில் இந்த கோடுகள் வரையப்பட்டு இருக்கின்றன.

இந்த கோடுகள் வரையப்பட்டுள்ள இடைவெளியில் நின்றே இனி ரெயில் நிலையங்களில் பயணிகள், ரோபோ போல நடமாட முடியும். அதாவது ஒருவர் நகர்ந்தால் தான், இன்னொருவர் முன்னோக்கி செல்ல முடியும். இதன்மூலம் தேன் கூட்டை சுற்றி மொய்க்கும் தேனீக்கள் போல இனி ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டத்தை பார்க்க முடியாது.

நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில், “இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன்” என்று விளையாட்டாக சொல்வார். அந்த காட்சி இனிமேல் ரெயில் நிலையங்களில் அரங்கேறப்போகிறது. கொரோனா என்ற கொடூர அரக்கன் தமிழகத்தை விட்டு நடையை கட்டும் வரை, ரெயில் நிலையங்களில் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். ரெயில் பெட்டிகள் வரிசையாக நிற்பது போன்று, பயணிகளும் இனி வரிசையாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் விமான பயணம் மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு முன்பாக செல்வது போன்று, இனி ரெயில் நிலையங்களுக்கும் ரெயில் புறப்படும் நேரத்துக்கு முன்னதாகவே பயணிகள் செல்லவேண்டிய நிலை உள்ளது. எது எப்படியோ அதிகமானோர் பயணம் செய்யக்கூடிய ரெயில் போக்குவரத்தில் சமூக இடைவெளி தேவை என்பது தற்போதைய காலத்தின் கட்டாயம். பயணிகளும் இதை முறையாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். அதை சாத்தியமாக்க பயணிகள் ஆயத்தமாக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page