கொரோனா நோய் ஒவ்வொரு பருவ காலத்திலும் மீண்டும் பரவி தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தொற்று நோய் மையத்தின் இயக்குனர் அந்தோனி பாசி தெரிவித்துள்ளார்.
பருவகால நோய் போல ஒவ்வொரு ஆண்டும் கொரோனா தாக்கும் – நிபுணர்கள் கணிப்பு
புதுடெல்லி:
கொரோனா நோய் பரவுதலை இப்போது கட்டுப்படுத்தி விட்டாலும் அது ஒவ்வொரு பருவ காலத்திலும் மீண்டும் பரவி தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க தொற்று நோய் – ஒவ்வாமை தடுப்பு மையத்தின் இயக்குனர் அந்தோனி பாசி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, குளிர்காலத்தில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சார்ஸ் நோயை பொறுத்தவரையில் அது நுரையீரலை நேரடியாக தாக்கியது. எனவே அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினால் மட்டுமே மற்றவர்களுக்கு பரவியது.
கொரோனா வைரஸ்
ஆனால் கொரோனா வைரஸ் மூக்கு நுழைவு பாதையிலேயே தனது இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தி வாழ்கிறது. பின்னர் உமிழ்நீருடனும் கலக்கிறது.
எனவே இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தவர்களுடன் பேசினால் கூட பரவிவிடும் என்றார்.
சீனாவில் உள்ள உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் ஜின்குய் கூறும்போது, கொரோனா வைரஸ் இனி நீண்ட காலமாக மனிதர்களுடன் இணைந்து வாழும். அது உடல்களுக்குள் நிலைத்து இருக்கும். பருவகாலத்தில் மீண்டும் தோன்றி தொற்று நோயாக பரவ வாய்ப்பு இருக்கிறது.
மேலும் விஞ்ஞானிகள் கூறும்போது, புளூ காய்ச்சல் எப்படி ஒவ்வொரு ஆண்டும் வருகிறதோ, அதேபோல இதுவும் தாக்கலாம் என்று கூறினார்கள்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிரப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் பருவகால புளூ காய்ச்சலால் 3 லட்சத்தில் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் வரை உயிரிழக்கிறார்கள்.
புளூ காய்ச்சல் போலவே கொரோனாவும் பரவும் பட்சத்தில் அது மிகப்பெரிய உயிரிழப்புகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.