சென்னையில் விதியை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தலைநகர் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விதிகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “ சென்னையில் விதியை மீறி தேவையின்றி வெளியே சுற்றினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். விதிகளை மீறும் கடை, நிறுவனங்கள், அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும். தனிமனித இடைவெளி இருநபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.