சீனப்பகுதியில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தது.
பீஜிங்,
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி ஒட்டு மொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. அதே சமயம் சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் தீவிரம் காட்டி வரும் நிலையில் உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் சீனா 5ஜி (5-ம் தலைமுறை இணைய சேவை) சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
சீனாவின் பக்கம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5,300, 5,800 மற்றும் 6,500 அடி உயரத்தில் 5ஜி நெட்வொர்க் கோபுரங்களை சீன அரசு டெலிகாம் நிறுவனமான ‘சீனா மொபைல்’ கடந்த வாரம் நிறுவியது.
அதனை தொடர்ந்து, சீன விஞ்ஞானிகள் எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் முகாம்கள் அமைத்து 5ஜி சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியில் இறங்கினர்.
இந்த நிலையில் 6,500 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள 5ஜி நெட்வார்க் டவர்கள் நேற்று முன்தினம் முதல் இணைய சேவையை வழங்க தொடங்கியிருப்பதாக ‘சீனா மொபைல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்களுக்கு சீனா மற்றும் நேபாள அரசுகள் தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.