கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானதுதான் என்று டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.
வாஷிங்டன்,
உலகையே இன்றளவும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் தொற்றுநோய் தோன்றியது எங்கே என்பதில் சர்ச்சை தொடர்கிறது. உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் சந்தையில்தான் அது தோன்றியதாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன. ஆனால் உகானில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவும், அங்கிருந்துதான் இது வெளியே கசிந்து பரவியதாகவும் அமெரிக்க டெலிவிஷன் ஒன்று செய்தி வெளியிட பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதை டிரம்பும் உறுதி செய்தார். அத்துடன் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் உடனடியாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், “உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வுக்கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக எதையாவது பார்த்திருக்கிறீர்களா?” என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது டிரம்ப் மீண்டும் திட்டவட்டமாக அதை உறுதி செய்தார். “ஆமாம். என்னிடம் இருக்கிறது” என்று ஒன்றுக்கு இரண்டு முறை அழுத்திச் சொன்னார். ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். அதே நேரத்தில், “விசாரணை நடத்தப்படுகிறது, அது விரைவில் வெளிவரும்” என்று மட்டும் குறிப்பிட்டார்.
”உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆய்வுக்கூடத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பதை எந்த நம்பிக்கையில் கூறுகிறீர்கள்?” என ஒரு நிருபர் மடக்கினார்.
அதற்கு டிரம்ப், “நான் அதை உங்களுக்கு சொல்ல முடியாது. அதை நான் உங்களுக்கு சொல்ல எனக்கு அனுமதி இல்லை” என பதில் அளித்தார்.
இதற்கிடையே ஒரு அபூர்வ நிகழ்வாக இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்புகளை மேற்பார்வையிடுகிற அதிகாரம் பெற்றிருக்கிற அமெரிக்க தேசிய உளவுத்துறையின் இயக்குனர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “கொரோனா வைரசின் இயற்கையான தோற்றம் பற்றிய பரந்த அறிவியல் உலகத்தின் கருத்துடன் எங்கள் அமைப்பு ஒத்துப்போகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலம் பரவுமா அல்லது உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து விபத்தாகத்தான் இந்த வைரஸ் கசிந்து பரவத்தொடங்கியதா என்பதை நிர்ணயிக்க தொடர்ந்து வெளிவரும் தகவல்களை தீவிரமாக ஆராய்வோம்” என கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஒரு உயிரி ஆயுதம், சதி என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமெரிக்க உளவுத்துத்துறையிடம் இருந்து வந்துள்ள முதல் தெளிவான பதில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-
சீனாவின் மக்கள் தொடர்பு அலுவலகம் போல செயல்படுவதற்காக உலக சுகாதார நிறுவனம் வெட்கப்பட வேண்டும். (கொரோனா வைரஸ் பரவ சீன அதிபர் ஜின்பிங்தான் காரணம் என பொறுப்பை சுமத்த டிரம்ப் மறுத்து விட்டார்.) நான் அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக கொரோனா வைரஸ் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம். அதை அவர்கள் செய்வார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்தது. ஒன்று அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போய் இருக்க வேண்டும் அல்லது அப்படி செய்யத்தேவையில்லை என முடிவு செய்திருக்க வேண்டும் அல்லது அது பரவட்டும் என்று விட்டிருக்கலாம். அனேகமாக அது கட்டுப்பாடற்று போய்விட்டது என்றுதான் கருதுகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.