கொரோனா ஊரடங்கால் சினிமா தியேட்டராக மாறிய விமானநிலையம்

Spread the love

கொரோனா ஊரடங்கால் சினிமா விமானநிலையம் தியேட்டராக மாறியது.

வில்னியூஸ்,

கொரோனா பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் கடந்த மார்ச் மாத மத்தியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வருகிற 10ம் தேதி வரை இது அமலில் இருக்கும்.

இந்தநிலையில் ஊரடங்கை சில நிபந்தனைகளுடன் தளர்த்தி திறந்தவெளி உணவகங்கள், கடைகளுடன் கூடிய சிற்றுண்டி சாலைகள் மற்றும் நூலகங்களை திறக்க லிதுவேனிய அரசு அண்மையில் உத்தரவிட்டது.

எனினும், அந்நாட்டில் சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் விமானபோக்குவரத்து இல்லாத காரணத்தால் தலைநகர் வில்னியூசில் உள்ள சர்வதேச விமான நிலையம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

இதைப் பயன்படுத்தி அங்கு சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி முடிக்க வில்னியூஸ் நகர சர்வதேச திரைப்பட கமிட்டி முடிவு செய்தது.

அதன்படி விமான நிலையத்தின் உட்புறமாக ஓடுபாதையையொட்டி 50 அடி உயரத்துக்கு பிரமாண்ட திரை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த புதன்கிழமை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.

முதல் படமாக ஆஸ்கர் விருது பெற்ற தென்கொரிய படமான ‘பாரசைட்’ திரையிடப்பட்டது. படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் விமான நிலைய ஓடுபாதையில் தங்களது கார்களை நிறுத்தியிருந்தனர்.

ஒவ்வொரு காருக்கும் சமூக இடைவெளியாக 2 மீட்டர் தூரம் விடப்பட்டது. மேலும் ஒவ்வொரு காரிலும் அதிக பட்சமாக இருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

திரைப்படத்தை பார்க்க 15 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.1,200) கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இந்த திரைப்பட விழா இம்மாத இறுதிவரை நீடிக்க வாய்ப்பிருப்பதாக திரைப்பட விழாவின் அமைப்பாளர் அல்கிர்டஸ் ரம்ஸ்கா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “விமான நிலையம் வருகிற 10-ந் தேதி தேதி மீண்டும் திறக்கப்பட்டாலும் கூட கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் வருவதும், இங்கிருந்து புறப்பட்டு செல்வதும் மிகக் மிக குறைவாகவே இருக்கும். அதனால் இந்த மாதம் முழுவதற்கும் திரைப்பட விழாவை எங்களால் இங்கே சிறப்பாக நடத்த முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

விமான நிலையம், சினிமா தியேட்டராக மாற்றப்பட்டது, அந்த நகர திரைப்பட ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page