கொரோனா வைரஸ் தாக்குதல்: என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் – போரிஸ் ஜான்சன் உருக்கமான பேட்டி

Spread the love

கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் என்று அப்போது அவர் கூறினார்.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி, லண்டன் செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்து மரணத்தின் விளிம்புக்கு சென்றார். ஆனாலும் அங்கிருந்த டாக்டர்களும், நர்சுகளும் தீவிர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினர். இப்போது அவர் முழுமையாக குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்சுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கேரி சைமண்ட்ஸ் இன்ஸ்டாகிராமில் தங்களது மகன் படத்தை வெளியிட்டுள்ளார்.

அவர்கள் தங்கள் மகனுக்கு வில்பிரட் லாரீ நிக்கோலஸ் ஜான்சன் என பெயர் சூட்டி உள்ளனர். இதில் நிக்கோலஸ் என்பது போரிஸ் ஜான்சனை மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய இரு டாக்டர்களின் பெயராகும். தன்னை காப்பாற்றிய டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம் கடமைப்பட்டிருப்பதாக போரிஸ் ஜான்சன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. அந்த நன்றிக்கடனை செலுத்தும் விதத்தில் தங்கள் மகனுக்கு டாக்டர்களின் பெயரையும் இணைத்து போரிஸ் ஜான்சன்-கேரி சைமண்ட்ஸ் சூட்டி உள்ளனர்.

இந்த நிலையில் தான் மரணத்தின் விளிம்புவரை போய் உயிர் பிழைத்ததுபற்றி முதல்முறையாக அந்த நாட்டின் பத்திரிகைக்கு மனம்திறந்து சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கி செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம், மிகவும் கடினமானது. நான் அதை மறுக்கவில்லை. என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராகி விட்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது. நான் அப்போது மிக மோசமான நிலையில் இருந்தேன். அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஏதேனும் விபரீதம் நடந்து விட்டால் என்ன செய்வதென அடுத்த கட்ட ஏற்பாடுகளையும் டாக்டர்கள் தயாராக வைத்திருந்தனர்.

அவர்கள் எனக்கு முக கவசம் அணிவித்து விட்டு லிட்டர் லிட்டராக ஆக்சிஜன் செலுத்தினார்கள். நீண்ட நேரம் இது நடந்தது. எனது மூக்கு வேலை செய்யவில்லை. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம், முதலில் நான் ஆஸ்பத்திரிக்கு போகவே விரும்பவில்லை. அது நல்ல நடவடிக்கையாகவும் எனக்கு அப்போது தோன்றவில்லை. ஆனால் அப்போது அனைவரும் என்னை ஆஸ்பத்திரிக்கு போக கட்டாயப்படுத்தியது சரிதான் என்பதை இப்போது உணர்கிறேன். சில நாட்களிலேயே என் உடல்நிலை இவ்வளவு மோசமாகி விடும் என நம்புவதே கடினமாகி விட்டது. நான் விரக்தி நிலைக்கே போய்விட்டேன். நான் ஏன் நன்றாக முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஒரு கெட்ட தருணம் வந்தது.

என் சுவாச குழாய்க்கு அடியில் ஒரு குழாயை வைப்பதற்கு 50 சதவீத தேவை வந்தது. அதை எப்படி செய்வது என டாக்டர்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். இதற்கு மருந்து இல்லை. குணப்படுத்த முடியாது என்று நான் நினைத்து கொண்டிருந்தேன். இதில் இருந்து நான் எப்படி மீளப்போகிறேன் என நினைத்தேன்.

முதல்முறையாக என் இறப்பைபற்றி நான் நினைத்தேன். பல முறை நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுபோல ஒரு போதும் நேர்ந்தது இல்லை. மூக்கு உடைந்திருக்கிறது. விரல் உடைந்திருக்கிறது. விலா எலும்பு உடைந்திருக்கிறது. ஆனாலும் இப்போது போல நான் மரணத்தை பற்றி எண்ணுகிற நிலைக்கு சென்றதே இல்லை.

நான் அதில் இருந்து மீண்டிருக்கிறேன் என்றால் அதற்காக எனக்கு அளித்த அற்புதமான சிகிச்சைதான் காரணம். இந்த உயிர்க்கொல்லி நோயில் இருந்து மீண்டு வந்தது அதிசயம்தான். இன்னும் எத்தனையோ பேர் போராடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்?

நான் இன்று முற்றிலுமாக குணமடைந்து திரும்பி இருக்கிறேன் நம் நாட்டையும் முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும் என்ற விருப்ப உணர்வால் நான் இயக்கப்படுகிறேன்.

நாட்டை முன்னோக்கி வழிநடத்திச்செல்வோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page