இலவச சாப்பாடு முடிவுக்கு வந்தது: அம்மா உணவகங்களில் இன்று முதல் கட்டணம் – கால நீட்டிப்பு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்

Spread the love

அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த சாப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று(திங்கட்கிழமை) முதல் உணவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. ஆனாலும் ஏழை எளியோருக்கு வயிறார உணவு கொடுக்கும் தளமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்தன.

இடர்பாடான சூழ்நிலையிலும் அம்மா உணவகங்கள் செயல்படுவது பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட சமயத்தில் அம்மா உணவகம் மூலம் அரசியல் பிரமுகர்களும், தன்னார்வலர்களும் இலவசமாக உணவளிக்க முன்வந்தனர். நிதி உதவியும் குவிந்தன.

இதையடுத்து அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்றும், அதற்குறிய தொகையை சம்பந்தப்பட்ட தன்னார்வலர்களிடம் இருந்து வசூலித்து வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் அம்மா உணவக ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கும் முறை கைவிடப்படுகிறது.

அதன்படி இன்று(திங்கட்கிழமை) முதல் கட்டணம் செலுத்திதான் பொதுமக்கள் உணவு சாப்பிட முடியும். இதுகுறித்து அம்மா உணவக ஊழியர்களுக்கு அந்தந்த மண்டல பொறுப்பாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அம்மா உணவகங்களில் இலவச சாப்பாடு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, அது கைவிடுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இடர்பாடான இந்த சூழலில் தொழில் நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச உணவு, ஏழை எளியோரின் வயிற்று பசியை போக்கி வந்தது.

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நிலைமை சீரடையும் வரையிலோ அல்லது ஒரு மாதத்துக்காவது இலவசமாக உணவு வழங்கினால் நன்றாக இருக்கும். இதன்மூலம் ஏழை, எளியோர் யாரிடமும் கையேந்தாமல் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டு செல்ல முடியும்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page