கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், கடைகள் இன்று திறப்பு – சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

Spread the love

கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால், 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், தனி கடைகள் இன்று(திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. அதே நேரத்தில், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

உயிர் கொல்லி வைரஸ் கிருமியான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.

தமிழகத்தில் கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் பச்சை மண்டல பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. ஆரஞ்சு மண்டல பட்டியலில் 24 மாவட்டங்களும், சிவப்பு மண்டல பட்டியலில் 12 மாவட்டங்களும் இருக்கின்றன.

கடைகள் திறப்பு

கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதால், இன்று முதல் கடைகளை பொறுத்தவரை, கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது, கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் ஆகிய கடைகள் தனித்து செயல்பட்டால் அவைகள் திறந்திருக்கும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆனால், யாரும் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் செயல்படாது. தனியாக இயங்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சுய தொழில்

சுய தொழில் செய்பவர்களில், எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், சாலையோர டெய்லர், செருப்பு தைப்பவர், இருசக்கர வாகன பழுது பார்ப்பவர், காய்கனி வியாபாரிகள், சாலையோர டிபன் கடைகள், தனி நபர் நகைத் தொழிலாளி, இஸ்திரி போடுபவர், பூ வியாபாரி உள்ளிட்டோர் பணியாற்றலாம்.

கடைகளை பொறுத்தவரை, எலக்ட்ரிக்கல் கடை, பேன்சி ஸ்டோர், நோட்டு புத்தக கடை, ஜெராக்ஸ் கடை, தட்டச்சு கடைகள், பத்திரம் எழுதுபவர், மொபைல் போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செருப்பு கடைகள், டி.வி., பிரிட்ஜ் விற்பனை கடைகள், ஹார்டுவேர் கடைகள், மளிகை கடைகள், சிறு தனிநபர் நடத்தும் துணி கடைகள், பேக்கரி கடை ஆகியவை இயங்கும். அதே நேரத்தில், சலூன், பியூட்டி பார்லர், உடற்பயிற்சி கூடம் ஆகியவை இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை.

தொழில் நிறுவனங்கள்

தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை 6-ந் தேதி திறக்கப்பட இருக்கிறது. நோய் தாக்கம் குறைந்த ஆரஞ்சு மண்டலத்தில், பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் செயல்படும்.

அதே நேரத்தில், பேரூராட்சி பகுதியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை இருந்தால், மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கு ஏற்ப ஜவுளித்துறை நிறுவனங்களை 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதேபோல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழில் நகரியங்கள், தொழிற்பேட்டைகளும் 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்படும்.

நகர்ப்பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி கிடையாது. இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கு ஏற்ப 50 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

5 பேருக்கு மேல் கூடக்கூடாது

மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும். கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கும்.

நகர்புற பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு மற்றும் மாதிரிகள் உருவாக்கத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து 30 பணியாளர்களை கொண்டு செயல்படலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

அதே நேரத்தில், ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால், 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூடக்கூடாது. சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். அனைவரும் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்பன போன்ற உத்தரவுகளை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page