டென்மார்க்கில் பள்ளிக்கூடங்கள் திறப்புக்கு பின்பு கொரோனா தாக்குதல் அதிகரிப்பு

Spread the love

டென்மார்க் நாட்டில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின்பு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கோபன் ஹேகன்,

கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் 13-ந்தேதி முதல் கடந்த 14-ந்தேதி முடிய ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊரடங்கை அமல்படுத்தியது. எனினும் ஊரடங்கை சில முக்கிய நிபந்தனைகளுடன் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் தளர்த்தியது. அன்று மழலையர் மற்றும் தொடக்க நிலை பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் உட்கார வைக்கப்பட்டனர்.

குழந்தைகளுக்கும், சிறார்களுக்கும் கொரோனா வைரஸ் எளிதில் தொற்றாது என்று வெளியான ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இப்படி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறந்த பின்பு கொரோனாவின் தாக்கம் எப்படி உள்ளது என்பது பற்றி அந்நாட்டின் தேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அப்போது பள்ளிகள் திறப்புக்கு பின்பு, ஊரடங்கு காலத்தில் இருந்ததை விட கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகமாகி இருப்பது தெரியவந்தது. அதாவது, அந்நாட்டில் ஒருவர் வைரசை பரப்பும் சதவீதம் 0.6-ல் இருந்து 0.9 சதவீதமாக உயர்ந்து இருந்தது. கொரோனா தாக்கத் தொடங்கியது முதல் பள்ளிகள் திறக்கப்படும் முன்பு வரை டென்மார்க் நாட்டில் 6,670 பேர் பாதிக்கப்பட்டும் 300 பேர் உயிரிழந்தும் இருந்தனர்.

ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 15 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 2,630 பேர் பாதிக்கப்பட்டும், 160 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இது 0.3 சதவீத உயர்வு ஆகும்.

இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் கூறும்போது, “வைரஸ் தொற்றை ஒருவர் பரப்பும் விகிதம் டென்மார்க்கில் சற்று அதிகரித்து இருப்பது உண்மைதான். இதனால் யாரும் பயப்பட வேண்டியதில்லை. அதேநேரம் இது 1.0 என்ற நிலையை கடந்து விடக்கூடாது. அப்படி அதிகரித்தால் நிலைமை கவலை அளிப்பதாக மாறும்” என்றனர்.

டென்மார்க்கில் பள்ளிகள் திறப்புக்கு பின்பு கொரோனாவின் தாக்கம் சற்று அதிகரித்து இருப்பது சில ஐரோப்பிய நாடுகளை பெரிதும் யோசிக்க வைத்து இருக்கிறது. இதனால் பள்ளிகள் திறப்பை இன்னும் ஓரிரு மாதங்கள் வரை தள்ளிப்போடலாமா? என்பது குறித்து அவை சிந்தித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page