கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து ஆராய்ச்சிக்கு உலக நாடுகள் ரூ.61,500 கோடி வழங்க சம்மதித்து உள்ளன.
நியூயார்க்,
சீனாவில் உகான் நகரில் தோன்றியதாக கூறப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று, ஏறத்தாழ 200 நாடுகளில் இப்போது கால் பதித்து ஆட்டம் போட்டு வருகிறது. 36 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்த வைரஸ் தொற்று தாக்கி இருக்கிறது.
இதற்கான சிகிச்சை பலன் அளிக்காமல் உலகம் முழுவதும் 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நோய்க்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவும் இல்லை. தடுப்பூசி உருவாக்கும் முயற்சிகள் உலகமெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் தடுப்பூசி சந்தைக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் மருந்து ஆராய்ச்சிக்கு சர்வதேச அளவில் நிதி திரட்டுவதற்கான 40 நாடுகளின் தலைவர்கள் கூட்டம், ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. காணொலி காட்சி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஐரோப்பிய கமிஷன் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உலக நாடுகள் 7.4 பில்லியன் யூரோ (சுமார் ரூ.61 ஆயி ரத்து 500 கோடி) வழங்க முன் வந்துள்ளன.
இந்த முயற்சிக்கு ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வரவேற்பு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றுநோயை கடந்து செல்வதற்கு வரலாற்றில் மிகப்பெரிய பொது சுகாதார முயற்சி தேவைப்படும். இது ஒன்றுடன் ஒன்று இணைந்த உலகம். நாம் அனைவரும் பாதுகாப்பாக இல்லாத வரையில், நம்மில் யாரும் பாதுகாப்பாக இருந்து விட முடியாது.
புதிய கருவிகள், கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உலகிற்கு முழுமையாக உதவக்கூடும். இதை உலகளாவிய பொதுப்பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது அனைவருக்கும் மலிவான விலையில் கிடைக்க வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று மெதுவாக பரவுவதற்கும், உயிர்கள் காப்பாற்றப்படுவதற்கும் பரந்து விரிந்த, ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகள் மிக முக்கியம். ஆனால் இது போன்ற நடவடிக்கைகளை எதிர்த்து வரும் நாடுகள் கூட ஆபத்தில் இருக்கின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்று, இன்னும் பல நாடுகளை தாக்குகிற ஆபத்து உள்ளது. அதன் தாக்கத்தை குறைத்துக்கொள்ளும் சாத்தியம் உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரவி வருகிறது. 35 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடூர வைரஸ் தாக்கி இருக்கிறது. 2 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
நம் அனைவருக்கும் பொதுவான ஒரு பார்வை தேவைப்படுகிறது. நாம் எங்கும் நம் மக்களை முன்னிலைப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கத்தேவையான நிதி திரட்டும் இந்தக் கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய இரு பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.