அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்று கூறியுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரிசி அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சென்னை நகரில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

சென்னையில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகையில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.

இதில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை மண்டல போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.க்கள் ஆபாஷ்குமார், அபய்குமார் சிங், மகேஷ்குமார் அகர்வால், அம்ரேஷ் புஜாரி மற்றும் மாநகராட்சி களப்பணிக் குழுவைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

மக்கள் தொகை மிகுந்த சென்னை

இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது:-

சென்னை மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக, கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடக்கப்பட்டு உள்ளது. அங்கு மக்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவித்தவுடன் அதை தீர்ப்பதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

சென்னை அதிக மக்கள் நிறைந்த நகரம். கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு இதுதான் காரணம். குறுகலான தெரு, அதிகமான மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் எளிதாக நோய் ஒருவரிடமிருந்து மற்றவரிடம் பரவிவிடுகிறது. அதோடு, பொதுக் கழிவறைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதனால், தொற்று எளிதாக பரவுகிறது.

உரிய சிகிச்சை

இதை கட்டுப்படுத்துவதற்கு, சென்னை மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் அவர்கள் வசிக்கிற இடங்களுக்கே செல்கிறது.

மக்கள் அதிகமாக வசிக்கிற பகுதி என்பதால் அவர்கள் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்வது கடினம் என கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

1,724 பேர் பாதிப்பு

சென்னையில் இதுவரை 1,724 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 267. இறந்தவர்கள் 19 பேர். அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை திரு.வி.க.நகரில் 356 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடம்பாக்கத்தில் 257 பேரும், அண்ணாநகரில் 141 பேரும், வளசரவாக்கத்தில் 114 பேரும், ராயபுரத்தில் 299 பேரும், தேனாம்பேட்டையில் 206 பேரும், தண்டையார்பேட்டையில் 136 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அச்சப்படவேண்டாம்

சென்னையில் மட்டும் 4 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. நோய் எதிர்ப்பு சக்திக்காக ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 50 பரிசோதனை மையங்கள் இன்றைக்கு அமைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றின் மூலமாக நாளொன்றுக்கு 12 ஆயிரம் பேரை பரிசோதனை செய்கிறோம். இவ்வளவு பேர் பரிசோதனை செய்யப்படுகிற காரணத்தினால்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. அதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

இலவச ரேஷன் பொருட்கள்

தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்ற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் செய்து இருக்கிறோம். சுமார் 36 லட்சம் பேருக்கு கருணைத் தொகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அனைத்து அரிசி வாங்குகின்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் கொடுக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இந்த மாதமும் (மே) மாதமும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஜூன் மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

அரசாங்கத்தின் அறிவிப்பை மக்கள் முறையாக கடைப்பிடித்தாலே, நோய் பரவலை தடுக்க முடியும். அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பணிபுரிய விருப்பமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கலாம். அவர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கு அதிகாரிகள் சென்று விவரங்களை சேகரித்து, அவர்கள் சொந்த ஊர் செல்ல தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். குழுக்கள் அமைத்து கூட்டம் சேராதபடி அவர்கள் சொந்த ஊர் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இரவு 10 மணிக்கு மேல்தான் ரெயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பகல் நேரத்தில் அழைத்துச் சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

தமிழ்நாட்டில் சுமார் 50 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எந்தெந்த மாநிலத்துக்கு, எந்த தேதியில் ரெயில்கள் இயக்கப்படும், எந்தெந்த தேதிகளில் அவர்களை அழைத்துச் செல்ல இருக்கிறோம் என்ற விவரங்களை அவர்களிடம் சொல்லவேண்டும். அதுவரை யாரும் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். படிப்படியாக ஒரு வாரத்துக்குள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page