நேபாளத்தில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு மே 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு மே 18-ம் தேதி வரை நீட்டிப்பு
காத்மாண்டு:
நேபாளத்தில் கொரோனா வைரசால் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், இன்று பிரதமரின் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மே 18ம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் வெறிச்சோடிய காத்மாண்டு சாலை
நேபாளத்தில் முதலில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது 2 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த வாரம் மட்டும் 23 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் 82 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் இல்லை.
கடந்த ஆறு வாரங்களாக ஊரடங்கை பயன்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.