தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா – சென்னையில் மேலும் 324 பேருக்கு தொற்று உறுதி

Spread the love

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் மேலும் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் 6-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வரை கொரோனா பரவும் வேகம் கட்டுக்குள் இருந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து மிகவும் வேகமாக பரவ தொடங்கியது.

தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 1,806 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக் கப்பட்டு உள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. கொரோனா வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப் படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்

சென்னையில் மட்டும் கடந்த 3 நாட்களில் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 650-க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பு உடையவர்கள்.

மேலும் சூளை பகுதியில் உள்ள தட்டான்குளம், மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 150-க்கும் மேற்பட்டவர்களும், ஐஸ் அவுஸ் பகுதியில் உள்ள ஒரு தெருவில் 60-க்கும் மேற்பட்டவர்களும், புளியந்தோப்பு பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்களும், வேளச்சேரியில் காய்கறி வியாபாரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 13 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னையை, தொடர்ந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்து இருக்கிறது. நேற்று நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 575 ஆண்கள், 196 பெண்கள் ஆவர். தமிழகத்தில் இதுவரை 3,320 ஆண்கள், 1,507 பெண்கள், இரண்டு 3-ம் பாலினத்தவர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் 324 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் நேற்று பாதிக்கப்பட்ட 771 பேரில் 324 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 1½ வயது பெண் குழந்தை உள்ளிட்ட 25 குழந்தைகளும் அடங்குவார்கள்.

அரியலூரில் 1 வயது பெண் குழந்தையையும் சேர்த்து 6 குழந்தைகள் உள்பட 188 பேரும், கடலூரில் 95 பேரும், காஞ்சீபுரத்தில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 45 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், மதுரையில் 2 வயது பெண் குழந்தையையும் சேர்த்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 18 பேரும், திருவண்ணாமலையில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேரும், செங்கல்பட்டு மற்றும் திண்டுக்கலில் தலா 9 பேரும், வேலூரில் 6 பேரும், விழுப்புரத்தில் 5 பேரும், பெரம்பலூரில் 2 வயது ஆண் குழந்தை உள்ளிட்ட 3 பேரும், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தேனி, தூத்துக் குடி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திருச்சி, நெல்லை, திருவாரூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், தென்காசி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

41 குழந்தைகள்

தமிழகத்தில் நேற்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 41 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 130 ஆண் குழந்தைகள், 124 பெண் குழந்தைகள் என மொத்தம் 254 குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 68 வயது ஆண் மற்றும் 59 வயது ஆண் என இருவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்து இருக்கிறது. இவர்களில் 22 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3,275 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,516 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனைகளில் 3,381 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

பரிசோதனை மையங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டுபிடிக்க தமிழகத்தில் 52 பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 413 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 241 மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளன.

இதில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 541 மாதிரிகளில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து உள்ளது. மேலும் 871 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. 9,769 மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page