இந்தியாவில் 53 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு நோய்த்தொற்று

Spread the love

இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் 3,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ந்து 3 கட்டங்களாக 54 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் சுமார் 40 நாட்கள் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. இதனால் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டுவர மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் குறைவான பணியாளர்களுடன் இயங்க தொடங்கியுள்ளன. மதுபான கடைகள் உள்பட பிற கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கடந்த 6 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் 24 மணி நேரத்தில் 3,561 பேரை நோய்த் தொற்றுக்கு ஆளாக்கிய கொரோனா, புதிதாக 89 பேரின் உயிரையும் பறித்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 952 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,783 ஆக உயர்ந்துள்ளது. இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா பாதிப்பில் இருந்து 1,084 மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் 15ஆயிரத்து 267 ஆக கூடியுள்ளது. நாடு முழுவதும் 35,902 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் புதிதாக பலியான 89 பேரில் 34 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனால் அங்கு மட்டும் இந்த வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 651 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் 28 பேரும், மத்திய பிரதேசத்தில் 9 பேரும், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா 4 பேரும், ராஜஸ்தானில் 3 பேரும், பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் தலா 2 பேரும், டெல்லி, அரியானா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா ஒருவரும் 24 மணி நேரத்துக்குள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கொரோனாவால் 6 மாநிலங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த வரிசையில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 16,758 பேரை கொரோனா பாதித்து உள்ளது. அடுத்த இடங்களில் உள்ள குஜராத்தில் 6,625 பேரும், டெல்லியில் 5,532 பேரும், தமிழகத்தில் 5,409 பேரும், ராஜஸ்தானில் 3,317 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,138 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். உத்தரபிரதேசத்தில் இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page