தளர்வு நடவடிக்கைகளை சரியாக நிர்வகிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்கு ஆபத்து – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Spread the love

ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை நாடுகள் சரியாக, திறம்பட நிர்வகிக்காவிட்டால் மீண்டும் ஊரடங்குக்கு திரும்பும் ஆபத்து உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஜெனீவா,

சீனாவின் மத்திய நகரமான உகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக தென்பட்ட கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகின் 200 நாடுகளுக்கு பரவி விட்டது.

இதன் தாக்கம் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நேற்று முன்தினம் கூறியதாவது:-

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்திடம் பதிவாகி உள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிற நிலையில், இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தொற்று அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. தங்கள் நாடுகளுக்கு கொரோனா வைரஸ் இறக்குமதியாகிறபோது, அந்தந்த நாடுகள், பிரதேசங்கள் அதை நிர்வகிக்க சமூகத்துக்கு முழுமையாக கற்றுத்தர வேண்டும். சுகாதார அமைப்புகளுக்கு தேவையான அடித்தளத்தை அவை அமைக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்திடம், கொரோனா வைரஸ் தொற்று 35 லட்சம் பேருக்கு தாக்கி உள்ளதாக பதிவாகி இருக்கிறது. கடந்த மாதத்தில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 80 ஆயிரம் பேருக்கு புதிதாக இந்த தொற்று பாதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த எண்ணிக்கை வெறும் எண்ணிக்கை அல்ல. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு தாய், ஒரு தந்தை, ஒரு மகள், ஒரு சகோதரர், ஒரு சகோதரி, ஒரு நண்பர் என்ற நிலையில் இருப்பவர்கள் ஆவார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றானது, இப்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகள், மற்றும் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு பிராந்தியத்திலும், நாடுகளுக்குள்ளும் இந்த நோயின் மாறுபட்ட போக்கை பார்க்க முடிகிறது. பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பரிசோதனைகளை அதிகரித்து வருவதின் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை படிப்படியாக தளத்துவதை நாடுகள் சரியாக, திறம்பட நிர்வகிக்காவிட்டால், மீண்டும் ஊரடங்குக்கு திரும்புகிற ஆபத்து இருப்பது உண்மை.

ஊரடங்கை தளத்த விரும்புகிற நாடுகள், உலக சுகாதார நிறுவனத்தின் 6 அளவுகோல்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீவிர கண்காணிப்பு வேண்டும். பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரவேண்டும். பரிமாற்றம் கட்டுக்குள் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோரை தொடர்ந்து அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்க வேண்டும். இவை யாவும் முக்கியம்.

பள்ளிக்கூடங்கள், பணித்தளங்கள், பொது இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் இறுதியில் குறைந்து விடும். ஆனாலும் வழக்கம்போல நாம் பணிக்கு திரும்பிவிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குனர் மைக்கேல் ரேயான் கூறுகையில், “ஐரோப்பாவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் அடிப்படையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கண்டோம். ஆனால் ரஷியாவில் அதிகரித்துள்ளது. தென் கிழக்கு, மேற்கு பசிபிக் பகுதிகளில் தென்கொரியா போன்று கொரோனா வைரஸ் தாக்குதல் குறைந்து வரும் போக்கை காண முடிகிறது. அதே நேரத்தில் இந்தியா, வங்காளதேசம் போன்ற ஆசிய நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரிக்கிற போக்கை காண முடிகிறது. எனவே எந்தவொரு பிராந்தியத்திலும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறைந்து இருக்கிறது அல்லது குறையவில்லை என்ற முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை” என குறிப்பிட்டார்.

உலக சுகாதார நிறுவனத்தின் வளர்ந்து வரும் நோய்கள் பிரிவின் தலைவர் மரிய வான்கெர்கோவ் கூறும்போது, “கொரோனா வைரஸ் பரவலை பொறுத்தமட்டில் நான் ஒப்பீடுகளை விரும்பவில்லை. கொரோனா வைரஸ் தாக்குதலை கண்டுபிடிப்பதற்கான உழைப்பை நாடுகள் அதிகரித்துள்ளன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டறிவதற்கான தங்களின் திறனை அதிகரிக்க முயற்சிக்கின்றன. அவர்களை பராமரிக்க தேவையானதை செய்யவும் பாடுபடுகின்றன” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page