தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6009-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது கோயம்பேடு மார்க்கெட் வழியாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இடையே பெரிதும் கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பெரும்பாலும் பாதிக்கப்படுகிறவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் தான்.
இதனால் பெரும்பாலான காய்கறி வணிகர்களுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 22 மாவட்டங்களில், கொரோனா நோய் தொற்றால் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 409 ஆக இருந்தது.
இந்த நிலையில், இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் , தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6009-ஆக உயர்ந்திருக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் இந்தத் தகவலை தெரிவித்தார்.