மின்சார சட்ட திருத்தத்தை கைவிட நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் தங்கமணி அறிக்கை

Spread the love

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளதால் 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னை,

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு 17.04.2020 அறிவிப்பின் வாயிலாக 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மின்சார சட்டத்திருத்தத்திலுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய சரத்துக்களை நீக்க மத்திய அரசை வலியுறுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கைக்கு பிரதமருக்கு, முதல்-அமைச்சர் 23.12.2014 அன்று எழுதிய கடிதத்தில் அதனை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட வரைவு மின்சார சட்டத்திருத்தத்தில் கூறப்பட்ட முக்கிய சரத்துக்களான நடுத்தர மக்கள் பெறும் மானிய விலை மின்சாரம் மற்றும் விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கான மானியத்தை பயனீட்டாளர்களின் வங்கி கணக்கிற்கு அந்தந்த மாநில அரசு நேரடியாக செலுத்துதல் மற்றும் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்த குழுவின் மூலமாக தேர்ந்தெடுத்தல் போன்ற மாநிலத்தின் உரிமைகளை இழக்க நேரிடும் வரைவு திருத்தங்களை கைவிடுமாறு வலியுறுத்தி முதல்-அமைச்சர் 12.11.2018 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது, மத்திய அரசு 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் மூலமாக, மேற்கூறிய முக்கிய சரத்துக்கள் மட்டுமல்லாது புதிய திருத்தமாக மின்சார வினியோகத்தை மேற்கொள்ள தனியார் துணை வினியோக உரிமம்தாரர் மற்றும் உரிமம் பெறுபவர் மூலமாக மேற்கொள்ளுதல் மற்றும் மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட மின்கொள்முதல், மின் விற்பனை செய்யும் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமம்தாரர்களுக்கு இடையேயான ஒப்பந்த சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை மத்திய அரசினால் புதிதாக அமைக்கப்படவுள்ள மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்திற்கு மாற்றுதல் போன்ற சரத்துக்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து வரைவு திருத்தங்களும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ளதால் இந்த வரைவு மின்சார, சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கைவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரால் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அரசு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளையும் அனுமதிக்காது. எனவே, தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 2020-ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தத்தினை கைவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

எந்த சூழ்நிலையிலும், தமிழக மக்களுக்கு பாதகமான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது என்ற ஜெயலலிதாவின் கொள்கையினை கடைபிடிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மேற்கூறிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் அமலாக்கத்திற்கு வராதவண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page