தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு – நாளை முதல் அமலுக்கு வருகிறது

Spread the love

தமிழகத்தில் நாளை முதல் மேலும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. 33 சதவீத பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு தொடர்பான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி இருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் தளர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாளை முதல் அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 24-3-2020 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த 2-5-2020 அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், 11-5-2020 (நாளை) முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மளிகை கடைகள்

* அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (அனைத்து தனி கடைகள்) காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (அனைத்து தனி கடைகள்) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

டீ கடைகள்

* சென்னை மாநகராட்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேனீர் கடைகள் (டீ கடைகள்) பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* தேனீர் கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்க தவறும் தேனீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

* பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி செயல்படும்.

* பெட்ரோல் பம்புகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

தனியார் நிறுவனங்கள்

* பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒத்துழைப்பு

அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும். கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த அ.தி.மு.க. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page