விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலி தொழில் நிறுவனங்களை திறக்க புதிய வழிமுறைகள் – மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

விசாகப்பட்டினம் துயர சம்பவம் எதிரொலியாக தொழில் நிறுவனங்களை திறப்பது தொடர்பாக புதிய வழிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதற்கு வசதியாக இப்போது கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு தொழில் நிறுவனங்களை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற தொழிற்சாலையை மீண்டும் திறந்தபோது, அங்கிருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டு சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளால் அல்லலுற்று ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்ட சம்பவம், போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தை நினைவூட்டுவதாக அமைந்தது.

இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்கிறபோது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

தொழில் நிறுவனங்கள் மீண்டும் திறந்து செயல்படத்தொடங்குகிறபோது, முதல் வாரத்தை சோதனை காலமாக கருத வேண்டும். அப்போது அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் உறுதி செய்து கொள்ளவேண்டும். அதிக உற்பத்தி இலக்கை அடைய முயற்சிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆபத்தை குறைக்கிற வகையில், குறிப்பிட்ட சாதனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் விசித்திரமான ஒலிகள் அல்லது வாசனை, வெளிப்படும் மின்சார வயர்கள், அதிர்வுகள், கசிவுகள், புகை, அசாதாரண தள்ளாட்டம், ஒழுங்கற்ற விதத்தில் அரைத்தல், அபாயகரமான பிற அறிகுறிகள் ஆகியவற்றை உணர்ந்தால் அந்த தொழிற்சாலை உடனடியாக பராமரிக்கப்படவேண்டும், தேவைப்பட்டால் மூடப்பட வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில், அனைத்து கதவடைப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை தினமும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

24 மணி நேரமும் இயங்குகிற நிறுவனங்களை பொறுத்தமட்டில், எல்லா சாதனங்களும் பாதுகாப்பு நெறிமுறைகளின்கீழ் உள்ளனவா? என்பதை மீண்டும் தொடங்குகிறபோது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக தொழில் நிறுவனங்கள் சிரமங்கள் இருந்தால், அவற்றின் பாதுகாப்பு செயல்பாடுகள் உதவிக்காக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

மூலப்பொருட்கள் சேமித்தல் போன்ற குறிப்பிட்ட தொழில்துறை நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page