ஆப்பிரிக்க நாடுகளில் காட்டுத்தீ போல கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோகன்னஸ்பர்க்,
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் வேகம் காட்டவில்லை. ஆனால், இப்போதோ காட்டுத்தீ போல அங்கு பரவத்தொடங்கி உள்ளது.
அங்கு 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஆப்பிரிக்க தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.
ஆப்பிரிக்காவை பொறுத்தமட்டில் அந்த கண்டத்தின் 54 நாடுகளில் ஒன்றான லெசோதா தவிர அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தென் ஆப்பிரிக்காவில் இதுவரை 9,400-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கெல்லாம் பரிசோதனை வசதிகள் பரவலாக இல்லை என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளதாகவும், உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் எனவும் தெரிகிறது.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சில நாடுகள் ஊரடங்குகளை தளர்த்தி வருகின்றன. மக்களின் வாழ்வாதாரத்துக்காகவும், குடும்பங்களுக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்த நாடுகள் கூறுகின்றன.