இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தனது பரவும் வேகத்தை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக கடந்த 5-ந்தேதி 3,875 பேருக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்திய கொரோனா, இப்போது ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 4,213 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளைவிட தற்போது கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்படுவதாலேயே பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா 97 பேரின் உயிரையும் பறித்துள்ளது. அதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 53 பேர் இந்த வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆகவும், பலியானவர்கள் எண்ணிக்கை 2,206 ஆகவும் அதிகரித்து இருப்பதாக அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிக பாதிப்பை சந்தித்துள்ள மராட்டியத்தில் மட்டும் 22,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,194 ஆகவும், தமிழகத்தில் 8,002 ஆகவும், டெல்லியில் 6,293 ஆகவும் ராஜஸ்தானில் 3,814 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 3,614 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 3,467 ஆகவும் உள்ளது.
ஆந்திராவில் 1,980 பேரும், மேற்குவங்காளத்தில் 1,939 பேரும், பஞ்சாபில் 1,823 பேரும், தெலுங்கானாவில் 1,196 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 861 பேரும் கர்நாடகாவில் 848 பேரும் அரியானாவில் 703 பேரும், பீகாரில் 696 பேரும், கேரளாவில் 512 பேரும், ஒடிசாவில் 377 பேரும், சண்டிகரில் 169 பேரும், ஜார்கண்டில் 157 பேரும், திரிபுராவில் 150 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உத்தரகாண்டில் 68 பேரையும், அசாமில் 63 பேரையும் சத்தீஸ்காரில் 59 பேரையும், இமாசலபிரதேசத்தில் 55 பேரையும், லடாக்கில் 42 பேரையும், அந்தமான்-நிக்கோபர் தீவில் 33 பேரையும், மேகாலயாவில் 13 பேரையும், புதுச்சேரியில் 9 பேரையும், கோவாவில் 7 பேரையும், மணிப்பூரில் 2 பேரையும், மிசோரம், தாதர்-நாகர் ஹவேலி மற்றும் அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
5 மாநிலங்களில் கொரோனா அதிகமானவர்களை உயிரிழக்கச் செய்துள்ளது. இதில் முதல் இடத்தில் உள்ள மராட்டியத்தில் 832 பேர் இந்த வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 493 பேரும், மத்தியபிரதேசத்தில் 215 பேரும், மேற்குவங்காளத்தில் 185 பேரும், ராஜஸ்தானில் 107 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மற்ற மாநிலங்களில் பலி எண்ணிக்கை 100-க்கும் குறைவாக உள்ளது.
நாடு முழுவதும் இந்த வைரஸ் பிடியில் சிக்கி சிகிச்சையின் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 20,971 ஆக உயர்ந்துள்ளது. 44,029 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.