‘கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது சவாலான பணி’ – முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய போது பிரதமர் மோடி பேச்சு

Spread the love

முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது சவாலான பணி என்று கூறினார்.

புதுடெல்லி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வருகிற 17-ந்தேதியுடன் முடிவடைய இருக்கிறது. ஆனால் 45 நாட்களுக்கு மேலாகியும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதற்கிடையே, ஊரடங்கையொட்டி விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கொரோனா பரவல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின்னர் 5-வது தடவையாக பிரதமர் மோடி நேற்று மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவது, ஊரடங்குக்கு பின் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளிப்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் முதல்-மந்திரிகளுடன் மோடி ஆலோசனை மேற்கொண்டார். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்த கருத்துகளையும் பிரதமர் கேட்டு அறிந்தார்.

ஆலோசனையின் போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா, அசாம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் பிரதமர் மோடியிடம் கேட்டுக் கொண்டனர்.

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், கொரோனாவை கட்டுப்படுத்துவது சவாலான பணியாக இருப்பதாக கூறினார். அத்துடன் அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்துக்கு வருகிற 31-ந் தேதி வரை ரெயில், விமான சேவைகளை தொடங்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தார். இதேபோல் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் ஆகியோரும் கோரிக்கை விடுத்தனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை கூடி இருப்பதால், பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டுக் கொண்டார்.

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசுகையில், பொருளாதார நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆலோசனையின் போது பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நிலைமை ஓரளவு சீரடைந்து இருப்பதால் தற்போது பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி இருக்கின்றன.

ஒவ்வொருவரும் அவரவர்கள் இடத்தில் இருப்பதுதான் நல்லது என்றாலும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புவது இயற்கைதான். இதனால் கிராமங்களில் கொரோனா பரவும் ஆபத்து இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். கிராமங்களில் கொரோனா பரவாமல் தடுப்பது மிகவும் சவலான பணி.

ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும், சமூக இடைவெளியையும் சரியாக பின்பற்றாததால் பிரச்சினை அதிகரித்து இருக்கிறது. கொரோனா பிரச்சினையை கையாளுவதில் அனுசரிக்கும் உத்தி தேவைப்படுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page