கொரோனாவால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோயை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை,
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நலவாழ்வு குழுமத்தின் சார்பில் ரூ.5 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கொரோனாவால் எற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கும் அடையாளமாக நேற்று 5 வாகனங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவை டாக்டர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும்.
நெஞ்சக நோய்களை கண்டறிய முடியும்
இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் கே.செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.