தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டு இருந்த பிளஸ்-1 தேர்வின் இறுதிநாள் தேர்வும் தள்ளிவைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.
கொரோனா பரவுவது தொடர்ந்து நீடிப்பதால், நாடு முழுவதும் ஊரடங்கு 3 முறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் தள்ளிவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்.இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அ
னைத்து தேர்வுகளும் காலையில் 3 மணி நேரம் நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. பிளஸ்-1 பொதுத்தேர்வில் இறுதி நாள் (மார்ச் 26-ந்தேதி) தேர்வான வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை ஜூன் 2-ந்தேதி எழுத வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும், பிளஸ்-2 இறுதிநாள் தேர்வில் (மார்ச் 24-ந்தேதி) பஸ் கிடைக்காமல் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்பட்ட 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி, அவர்களுக்கு ஜூன் மாதம் 4-ந்தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலை மாறி இயல்பு நிலை திரும்பிய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:- “ தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.