ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளை தொடங்கும் முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? – தமிழக அரசு உத்தரவு

Spread the love

ஊரடங்கு முடிந்த பிறகு தொழிற்சாலைகளை தொடங்கும் முன்பு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுபற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகம் 9-ந்தேதி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, ஊரடங்குக்குப் பிறகு தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவது தொடர்பான வழிகாட்டிகள் வெளியிடப்படுகின்றன.

கடந்த பல வாரங்களாக ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது. எனவே பல கம்பெனிகளில் நிலையான செயல்பாட்டு முறையை பின்பற்றியிருக்க வாய்ப்பில்லை. இதனால் உற்பத்தி வசதிகள், பைப் லைன், வால்வுகள் உள்ளிட்டவற்றில் சில ஆபத்துகள் இருக்கக் கூடும்.

ரசாயனப் பொருட்கள், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை தேக்கி வைத்துள்ள இடங்களிலும் அபாயம் இருக்கக் கூடும். இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை, ரசாயன பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் கீழ் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கப்பட்டுள்ளன.

பெரிய எந்திரங்கள், கருவிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிக்காவிட்டால் அதை இயக்குபவர்களுக்கு பெரிய அபாயத்தை அவை உருவாக்கிவிடும். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய திரவங்கள், அடைத்து வைக்கப்பட்டுள்ள வாயு, திறந்த நிலையில் வைக்கப்பட்டுள்ள வயர், கன்வேயர் பெல்ட், தானியங்கி உபகரணங்கள் போன்றவை உற்பத்தி தொழிற்சாலைகளில் அதிக அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. இவற்றை மிகச் சரியாக கண்காணித்து உபயோகிக்க வேண்டும்.

தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்கும்போது முதல் வாரத்தை சோதனை ஓட்டமாக மேற்கொள்ள வேண்டும். அப்போது அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உடனே அதிக உற்பத்தி இலக்குகளை சாதிக்க முயற்சிக்கக் கூடாது.

எந்திரங்களில் வித்தியாசமான சத்தம், வாசனை, பிய்ந்திருக்கும் வயர், அதிர்வுகள், கசிவுகள், புகை, தள்ளாட்டம், ஒழுங்கற்ற சுழற்சி போன்ற குறியீடுகள் தெரிந்தால் உடனடியாக நிறுத்த வேண்டும். அனைத்து உபகரணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

தேக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள், இடங்களை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குழாய்கள், வால்வுகளை கழுவுதல், கழிவு வெளியேறும் பாதைகளை சுத்தப்படுத்துதல், வெளியாகும் வெப்பத்தின் அளவை கணித்தல், அழுத்தம், வெப்பத்தை அளக்கும் கருவிகளின் இயக்கத்தை கண்காணித்தல் போன்றவற்றோடு, எந்திரங்களின் நிலைப்பாட்டை சோதித்துப் பார்க்க வேண்டும்.

தொழிலாளர்களின் உடல்நிலை நாளுக்கு 2 முறை சோதிக்கப்பட வேண்டும். நோய் அறிகுறி இருப்பவரை வேலைக்கு அழைக்கக் கூடாது. சானிடைசர், முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page