மதுக்கடைகள் மூடிய வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி,
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தமிழகம் முழுவதும் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு, வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் (‘டோர் டெலிவரி’) முறையை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி மூலம் விசாரிக்கிறது.
இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக்கவேண்டும் என்று பா.ம.க. வக்கீல் கே.பாலு, தே.மு.தி.க. வக்கீல் ஜி.எஸ்.மணி, மக்கள் நீதி மையம் கட்சியின் அமைப்பு பொதுசெயலாளர் ஏ.ஜி.மவுரியா, மக்கள் அதிகாரம் அமைப்பின் ஜி.ராஜேஷ், டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வக்கீல் ஆனந்த செல்வம், மகாலஷ்மி மகளிர் ஆயம் லஷ்மி மணியரசன் ஆகியோர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.