உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது
ஜெனீவா,
சீனாவின் உகான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்திய போதிலும், மீண்டும் 2-வது அலையாக அந்நாட்டில் கொரோனா பரவுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில், உயிர்ப்பலியை வாங்கத்தொடங்கிய கொரோனா, சுமார் 5 மாதங்களில் உலகம் முழுவதிலும் 3 லட்சம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300,220 ஆக உள்ளது.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 85,463-பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அடுத்த படியாக இங்கிலாந்தில் 33,614-பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இத்தாலி (31,368), ஸ்பெயின் (27,321), பிரான்சு ( 27,074)- பேரும் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பில் இருந்து 1,682,872-மீண்டுள்ளனர்.