உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 3 லட்சத்தை கடந்து உள்ளது; குணமடைந்தவர்கள் 16 லட்சத்தை நெருங்குகிறது.
வாஷிங்டன்
உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. அதே நேரம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கி வருகிறது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகளை திறக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டின் மூத்த அரசு மருத்துவர் ஆண்டனி பவுசி பள்ளிகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையில், விஸ்கான்சின் மாகாணத்தில் ஊரடங்கை நீட்டிப்பு செய்து மாகாண ஆளுநர் பிரப்பித்த உத்தரவை மாகாண நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்த படியாக கொரோனா வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் 2 லட்சத்து 43 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,200 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பின் மையமாக விளங்கும் மாஸ்கோ நகரில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசு 60 சதவீதம் வரை குறைத்து காட்டியிருப்பது தெரிவந்துள்ளது.
சீனாவுக்கு வெளியில் முதன்முதலில் பாதிப்பை சந்தித்த தென் கொரியா மிக வேகமாக வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்நாட்டில் தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, தென்கொரியாவில் புதிய பாதிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது தினந்தோறும் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட வருகின்றனர். இதேபோல், வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்த சீனாவிலும் கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அடுத்த மூன்று தினங்களில் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது வைரஸ் பரவல் மீண்டும் கட்டுக்குள் வந்துள்ளது.
பிரேசிலில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. பிரேசில் அதிபர் போல்சனாரோ, கொரோனா பாதிப்பை அலட்சியமாக கையாண்டுவரும் நிலையில், அந்நாடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் பிரான்சை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக புதிதாக ஒரு கொரோனா பாதிப்பு கண்டறியப்படாத நிலையில், இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் மற்றும் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் இன்று முதல் உணவு விடுதிகள் மற்றும் காபி ஷாப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுபான விடுதிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
உலகிலேயே முதன்முறையாக தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முடிவு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது.