தமிழகத்தில் பல்வேறு தொழில்களுக்கு சூழ்நிலையைப் பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் சென்னை பன்னாட்டு மையம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தொழில் முனைவோர் பங்கேற்ற இணையதள கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆற்றிய உரை வருமாறு:-
பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தற்போது படிப்படியாக தளர்த்தி வருகிறது. வல்லுநர் குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டன.
சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. அனைத்து தொழிற்சாலைகளும் அரசு அளித்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட்டு வருவதைப் பாராட்டுகிறேன்.
சூழ்நிலையைப் பொறுத்து மேலும் தளர்வுகளை அரசு படிப்படியாக வழங்கும். தொழில் துறையினர் விழிப்போடு இருந்து, நோய் பரவலைத் தடுத்து, தகுந்த பாதுகாப்புடன் உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிணை சொத்தின்றி உடனடி கடன் வழங்கும் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் இதுவரை 799 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 102 கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன், சிறப்பு நிவாரணம் உள்ளிட்ட உதவிகளைக் கேட்டு பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதங்கள் எழுதியுள்ளேன். அதன் விளைவாக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
சிறப்பு பணிக்குழு
இச்சலுகைகளை தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பெற்று பயன்பெறுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அவற்றை ஊக்குவித்திட, தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்களுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். மாநில அளவிலான வங்கிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்திட்டங்களின் செயல்பாடுகளை முடுக்கிவிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ள சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கத் சிறப்பு பணிக் குழுவை ஏற்படுத்தியுள்ளேன்.
முக்கிய கவனம்
கொரோனா பாதிப்புக்குப் பின், நீண்டகால நோக்கில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய உயர்மட்ட குழுவை அமைத்துள்ளேன். மாநில அரசின் நிதிநிலை மற்றும் அதிகார வரம்பிற்கு உட்பட்டு, தொழில்துறையினர் வைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும்.
நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன். அதாவது, தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, தற்போதைய பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல்;
புதிய முதலீடுகளை ஈர்த்தல்; அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்கி, விரைவாக ஒப்புதல் வழங்குதல்; கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரித்தல் ஆகும்.
தொழில்முனைவோர் என்னை நேரில் சந்திக்க விரும்பினால், 24 மணி நேரத்தில் நேரம் ஒதுக்கித் தரப்படும். அதே நாளில் தலைமை செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தங்களை சந்திப்பார்கள்.
இக்கட்டான சூழ்நிலை
மருத்துவம், பாதுகாப்பு, மின்சார வாகனங்கள், இ.எஸ்.டி.எம். மற்றும் ஜவுளி போன்ற துறைகளுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு உருவாக்கப்படும். இச்செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம், புதிய தொழில்கள் மற்றும் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்கள் மேலும் சிறப்புடன் செயல்படவும், கொரோனா விடுத்துள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும் இயலும் என்பதில் ஐயமில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழில்கள் தொடங்க உள்ளதால், அரசின் விதி முறைகளை முழுமையாக கடை பிடித்து, தொழில் வளர்ச்சி மற்றும் பணிப் பாதுகாப்பை, உறுதி செய்திடும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.