புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று, ஒட்டுமொத்த உலகையும் அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல், புதிது புதிதாக பல்வேறு பிரச்னைகள் தோன்றி வருகின்றன. இவற்றில் மாபெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது தொழிலாளர்களின் இடப் பெயர்வுதான்.
ஊரடங்கு உத்தரவால், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். குறிப்பாக, புதுடில்லியில் தங்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்த உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, அடுத்த வேளை உணவுகூட இல்லா நிலை ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கால் அனைத்துப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொழிலாளர்கள், பல நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருக்கும் தங்களின் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்ல முடிவெடுத்து, டில்லி தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து செல்கின்றனர்.பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பம் குழந்தைகளுடன், உணவு, குடிநீர் இல்லாமல் நெடும் பயணம் மேற்கொள்ளும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இந்த தொழிலாளர்கள், தங்களின் ஊர்களுக்குச் செல்ல மத்திய அரசு பஸ் வசதி செய்து கொடுத்தது. இருந்தும் நடந்து செல்பவர்களின் எண்ணிக்கை இதுவரை குறையவில்லை.இந்நிலையில், அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை, இன்று (30ம் தேதி) தலைமை நீதிபதி பாப்டே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
‘உணவு, குடிநீர் இன்றி தொழிலாளர்கள் இடம் பெயர்வது, கொரோனா வைரஸ் தொற்றை விடப் பெரிய பிரச்னை. தொழிலாளர்கள் இடப்பெயர்வு தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசிற்கு, நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பஸ் அல்ல… வாழ்வாதாரம் வேண்டும்!
வழக்கறிஞர் அலோக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்
ளதாவது:ஏழைகளும் புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களும் ஊரடங்கு உத்தரவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வாழும் இடங்களில் உணவு, குடிநீர் கூட இல்லை. கொரோனா அச்சத்தைவிட அவர்களுக்குப் பசியின் கொடுமை அதிகமாக உள்ளது. இதனால் அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் துவங்கியுள்ளனர். அவர்களுக்கு இப்போதைய தேவை, சொந்த ஊர்களுக்குச் செல்ல தேவையான பஸ் வசதியல்ல; வாழ்வாதாரத்திற்கான வழியே’ என, வேதனை தெரிவித்துள்ளார்.