கொரோனா தொற்று மையமாக மாறும் மும்பை தாராவி பகுதி
18-ம் நூற்றாண்டில் மாங்குரோவ் காடுகளுடன் கூடிய தீவாக இருந்த பகுதிதான் இப்போது மக்கள் கடலைக் கொண்ட குடிசைப்பகுதியாக மாறி இருக்கிறது. கொரோனா வைரஸ், இந்த தாராவியை தவிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
ஆசியாவில் அதிக குடிசைகளை கொண்ட பகுதிகளில் ஒன்று. அது மட்டுமல்ல, அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ள பகுதிகளிலும் ஒன்று. 2½ ச.கி.மீ. பரப்பளவை கொண்டது. மக்கள் தொகை 7 லட்சத்துக்கு அதிகம். ஒரு ச.கி.மீ. பரப்பளவில் 2.27 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஒரு சின்னஞ்சிறு அறையில்கூட 10-க்கும் மேற்பட்டோர் வாழும் அவலம்.
தமிழகத்துக்கு வெளியே தமிழர்கள் அதிகளவில் நெருக்கமாக வசிக்கிற இடம்.. தோல்பொருட்கள், மண்பாண்டங்கள், துணிகள் உற்பத்தி முக்கியமாக நடக்கிறது. இப்படி தாராவியின் ஜாதகம் நீளுகிறது.
கடந்த காலத்தில் பிளேக், காலரா, போலியோ, டைபாய்டு என பல நோய்களை கண்டு வந்துள்ள தாராவி இப்போது கொரோனா வைரசின் தொற்றுமையம். இதில் இருந்து தாராவி மீளுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.
நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பாதித்தவர்களை கொண்டுள்ள மாநிலமாக மராட்டியம் உருவாகி உள்ளது. முதன்முதலாக மராட்டியத்தில் அதுவும் மும்பையில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் அனைவரின் கவனமும் தாராவியின் பக்கம்தான் சென்றது.
முதன்முதலாக தாராவியின் பாலிகா நகரில் கொரோனா தொற்று ஒருவருக்கு ஏப்ரல் 1-ந் தேதி பாதித்தது. இந்த 45 நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொரோனா பாதித்து இருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.
மாதுங்கா தொழிலாளர் முகாம், 90 அடி ரோடு, 60 அடி ரோடு, கும்பர்வாடா, குறுக்குசாலை, நாயக் நகர் உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக காட்சி அளிக்கின்றன.
ஊரடங்கை அமல்படுத்தி மளிகைக்கடைகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் மூடிப்போட்டிருக்கிறார்கள். ஆனாலும் நெருக்கமான குடிசை வீடுகள், குறுகலான சந்துகள் என தாராவியில் விரவிக்கிடப்பதால் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது சாத்தியமானதாக தெரியவில்லை என்றே தாராவிவாசிகள் சொல்கிறார்கள்.
தாராவி புனர்விகாஸ் சமிதியின் தலைவர் ராஜூகோர்டே, “தாராவியின் மிகப்பெரிய பிரச்சினை அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமல் இருப்பதுதான். இன்னொருபக்கம் குடிசைகள் மிக நெருக்கமாக அமைந்திருக்கின்றன. மிக மிக குறுகலான சந்துகளில் அவை அமைந்திருக்கின்றன. இங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது சாத்தியமற்றது” என்று சொல்கிறார்.
தாராவியில் 225 சமூக கழிவறைகளும், 100 பொது கழிவறைகளும், 125 மராட்டிய வீட்டு வசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணைய கழிவறைகளும்தான் இருக்கின்றன. ஒரு கழிவறையை பல நூறு பேர் தினமும் பயன்படுத்துகிற பரிதாப நிலை உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து தாராவியில் அதிகரித்திருப்பதற்கு போதிய கழிவறைகள் இல்லாததும், ஒரு கழிவறையை பல நூறுபேர் பயன்படுத்துவதும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இதை மும்பை மாநாகராட்சி அதிகாரி ஒருவர் உண்மைதான் என ஒப்புக்கொள்கிறார். “ஒரு கழிவறையை நூற்றுகணக்கானோர் பயன்படுத்துகிறபோது என்ன செய்ய முடியும்? இதுதான் அதிகபட்ச ஆபத்தாக இருக்கிறது. 47 ஆயிரத்து 500 பேர் அதிகபட்ச ஆபத்தான பகுதியில் இருக்கிறார்கள். 1¼ லட்சம் மக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது” என்பது அந்த அதிகாரியின் கருத்தாக இருக்கிறது. இந்த மக்களுக்கு எல்லாம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மலேரியா மாத்திரையான ஹைட்ராக்சிகுளோரோகுயின் தருவது பற்றியும் அதிகாரிகள் பரிசீலிக்கிறார்கள்.
4 லட்சம் பேர் தனியார் டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
2 வாரங்களுக்கு முன்பு மத்திய குழு மும்பைக்கு வந்தபோது, தாராவி பகுதியில் கட்டுப்பாட்டு உத்திகள் எல்லாம் பலன் அளிக்காது என்று எச்சரித்து விட்டுப்போயிருக்கிறார்கள்.
மக்கள் பயத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தினந்தோறும் 40 பேர், 50 பேர் என கொரோனா தொற்றுக்கு ஆளாவது தொடர்கதையாய் நீளுகிறது. ஆஸ்பத்திரிகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன.
மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் கிரண் திகாவ்கர் இப்போது எடுக்கப்படுகிற நடவடிக்கைகள் பற்றி சொல்கிறபோது, “மக்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு மாற்றுதல், பாதிக்கப்பட்டவர்களின் தடங்களை அறிதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருகிறோம். முதலில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றால் அவரது குடும்பத்தினரையும், அண்டை வீட்டார்களையும் அதிக ஆபத்துக்குரியவர்கள் என குறியிட்டோம். அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு மாற்றினோம். இப்போது ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான உடனேயே, பொது கழிவறையை பயன்படுத்துகிற அந்த கிளஸ்டரில் (பகுதியில்) உள்ள எல்லோரையும் பட்டியலிடுகிறோம்” என்கிறார்.
அடுத்து மும்பையில் மழைக்காலம் விரைந்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் என்றால் தொற்றுநோய்களுக்கு கொண்டாட்டம். அது தாராவி மக்களுக்கு திண்டாட்டமாக அமைந்து விடுமோ என்ற பயத்தில் தாராவிவாசிகள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மராட்டிய அரசு என்ன செய்யப்போகிறது, மும்பை மாநகராட்சி என்ன செய்யப்போகிறது என்று ஒரு பக்கம் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு வருடம்போலத்தான் தாராவிவாசிகள் கழிக்கிறார்கள். தாராவியின் பிரச்சினை எளிதில் தீர்க்கக்கூடியவையாக தெரியவில்லை. அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதே சாத்தியமில்லை என்கிறபோது, இங்கு கொரோனா தொற்றை அவ்வளவு எளிதில் முடிவுக்கு கொண்டுவருவது என்பது கனவா அல்லது நனவா என்பது தெரியவில்லை. தாராவி மக்கள் கலங்கிய கண்களுடன், எதிர்காலம் பற்றிய பதைபதைப்புடன் ஒவ்வொரு மணித்துளியையும் கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மட்டும்தான் நிதர்சனம்.