கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக என்ஜினீயர் முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு தமிழக என்ஜினீயர் செல்ல கேரள அரசு அனுமதி
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் பாசன வசதி பெற்று வருகின்றனர்.
மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்த அணையின் பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இருந்து யாரும் கேரளாவுக்கு வரக்கூடாது என அம்மாநில அரசு தடை விதித்திருந்தது. அணையின் பராமரிப்பு, நீர்மட்ட அளவு, நீர்வரத்து, நீர்வெளியேற்றம், கசிவு, மதகுகள் இயக்கம் போன்ற பணிகளுக்காக உதவி பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் அங்கேயே இருந்து பணிபுரிந்து வந்தனர். கடந்த 50 நாட்களுக்கு மேலாக அவர்களும் தமிழகத்திற்கு வர முடியவில்லை.
பெரியாறு அணையில் ஏற்கனவே குமார், பரதன் ஆகிய 2 உதவி பொறியாளர்கள் உள்ளனர். தற்போது 3-வதாக பிரவீன் குமார் என்ற பொறியாளர் நியமிக்கப்பட்டார். இவர் பராமரிப்பு பணிகளுக்காக பெரியாறு அணையில் பொறுப்பு ஏற்க இருந்த நிலையில் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதுகுறித்து அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வின் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் தெரிவித்தார். இது குறித்து இடுக்கி மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கேரள அரசிடம் எடுத்துரைக்கப்பட்டு தமிழக என்ஜினீயர் பிரவீன்குமார் பெரியாறு அணை செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே பெரியாறு அணைக்கு சென்று வந்த இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.