கொரோனா எதிரொலியாக டெல்லியில் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளி மாணவ மாணவியர் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நேரடியாக அடுத்த வகுப்புக்கு சென்று விடுவார்கள்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா அச்சம் சூழ்ந்த நிலையில், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் கடந்த 23ந்தேதி முதல் மூடும்படி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டார். இதனை அடுத்து மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி துணை முதல் மந்திரி மற்றும் கல்வி மந்திரியான மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் அனைவரும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நேரடியாக அடுத்த வகுப்புக்கு சென்று விடுவார்கள். இந்த சட்டத்தின்படி எந்தவொரு மாணவ மாணவியரையும், தேர்வில் தோல்வியடைய செய்யவோ அல்லது பள்ளியில் இருந்து வெளியேற்றவோ முடியாது.
எஸ்.எம்.எஸ். மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புகள் வழியே மாணவ மாணவியர்களின் பெற்றோர்களுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட ஒரு திட்டப்பணி அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவ மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர் என கடந்த 25ந்தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டனர்.