கொரோனா வைரஸ் பரவலால் இந்தியா வரும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்ப்பது எப்படி? என்பது குறித்து சிறப்பு பணிக் குழு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
சென்னை,
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவுக்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன.
அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அந்த முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில், அரசு உயர் அதிகாரிகள், துறை தலைமை அதிகாரிகள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளைச் சார்ந்த தொழில் கட்டமைப்பினர்கள் அடங்கிய, முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பணிக் குழுவின் முதல் கூட்டம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள், கொரிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ஜங்ஹி ஹான், தாய்வான் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் தாவே ஸாய், ஹுண்டாய் நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ்.எஸ்.கிம், தொழிலதிபர்கள் மல்லிகா சீனிவாசன், சக்திவேல், ஸ்ரீதர் வேம்பு, ஹரி தியாகராஜன், பொன்னுசாமி, பீட்டர் நிக்கல்சன், வைபவ் மித்தல், குருராஜ், அர்ஜித் சென், சீனிவாசன் சுந்தரம், யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப். மற்றும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை தெரிவித்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.