டாஸ்மாக் கடைகளில் தொடர்ந்து 2-வது நாளாக மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கியதால், விற்பனை படுஜோராக இருந்தது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு உத்தரவால் கடந்த 9-ந்தேதி முதல் தற்காலிகமாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள், சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மது விற்பனை தொடங்கியது.
கொரோனா பீதியால் மதுபிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மதுக்கடைகளில் தினமும் தலா 500 பேருக்கு மட்டும் டோக்கன்கள் வழங்கி, அதன் அடிப்படையில் மது விற்பனை செய்யும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு நிறம் என்று 7 வண்ணங்களில் டோக்கன் கள் அச்சிடப்பட்டு உள்ளன.
டாஸ்மாக் கடைகள் முன்பு நேற்று முன்தினம் மதுபிரியர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருந்தும், வெயிலின் கொடுமையை அனுபவித்தும் மதுபானங்களை வாங்கி சென்றனர். மதுபிரியர்களின் படையெடுப்பால் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.163 கோடி அளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றது.
இந்தநிலையில், நேற்று 2-வது நாளாக மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று முன்தினம் மது கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெறும் கையோடு வீடு திரும்பிய மதுபிரியர்கள் நேற்று எப்படியாவது மதுவை வாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினர். எனவே அதிகாலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
காலை 10 மணிக்கு டோக்கன் வினியோகம் தொடங்கிய சில நிமிடங்களில் 500 டோக்கன்களும் காலியாகின. டோக்கன் கிடைத்தவுடன் ஆனந்தம் அடைந்த மதுபிரியர்கள் மதுவை கையில் வாங்கியவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவர் எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கி கொள்ளலாம் என்ற டாஸ்மாக் நிர்வாகத்தின் தாராள மனப்பான்மையால், வசதி படைத்த மதுபிரியர்கள் பணத்தை தண்ணீரை போன்று வாரி செலவு செய்து மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.
கொரோனாவால் மதுக்கடைகளை மீண்டும் பூட்டிவிடுவார்களா? என்ற அச்சம் மதுபிரியர்கள் மத்தியில் காணப்பட்டது. எனவே ஒரு சிலர் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர். சாக்கு மூட்டைகள் நிறைய மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு ‘சுகமான சுமை’ என்றுக்கூறி தூக்கி சென்றதை பார்க்க முடிந்தது.
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் மது வாங்க வந்த மதுபிரியர்கள் வயல்வெளி, காலி இடங்களில் சமூக இடைவெளிவிட்டு அமர வைக்கப்பட்டு வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், ‘கத்திரி வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நடவடிக்கையாகவும் குடைபிடித்து வருபவர்களுக்கே, மதுபானங்கள் வழங்கப்படும்’ என்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு சரக டி.ஐ.ஜி. தேன்மொழி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளில் குடையுடன் மதுபிரியர்கள் திரண்டனர். குடைபிடித்தபடி வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். குடை இல்லாமல் மது வாங்க வந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். சாலையில் கையில் குடையுடன் நடந்து சென்றவர்களை பார்த்து, எங்கே சரக்கு வாங்கவா? என்று சிலர் கேலி, கிண்டலும் செய்தனர்.