தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும்-50 சதவீத ஊழியர்கள் பணிபுரிவார்கள்

Spread the love

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று(மே 18) முதல் வாரத்தின் ஆறு நாட்களும் செயல்பட உள்ளன. 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர்.

சென்னை,

நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 3-வது கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் 4-ஆம் கட்ட இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் பாதி எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

*ஏற்கனவே பணி நேரத்தை இழந்திருப்பதால் அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாட்களையும் பணி நாட்களாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. 6 நாட்களும் தற்போதுள்ள வழக்கமான பணி நேரத்தை பின்பற்றி அலுவலகம் இயங்க வேண்டும்.

*அரசு ஊழியர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட வேண்டும். முதல் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் முதல் பிரிவினர் பணியாற்றுவார் கள். புதன்கிழமை, வியாழக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும்; வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் முதல் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

*அடுத்த வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமையில் இரண்டாம் பிரிவினரும், புதன்கிழமை, வியாழக்கிழமையில் முதலாம் பிரிவினரும், வெள்ளிக்கிழமை, சனிக்கிழமையில் இரண்டாம் பிரிவினரும் பணியாற்ற வேண்டும்.

*இந்த மாற்று வேலைத் திட்டத்தின்படி ஊழியர் வீட்டில் இருந்தாலும், வேலைக்கு அழைத்தால் அலுவலகத்துக்கு வர வேண்டும். சம்பளப் பட்டியலின்படி குரூப் ஏ பிரிவில் வரும் அனைத்து அரசு ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

*அதுபோல, சம்பளப் பட்டியலின்படி அல்லாமல், அலுவலகத்தின் தலைமைப் பணியில் இருக்கும் ஊழியர்களும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும். அனைத்து அதிகாரிகள், ஊழியர்களும் பணிக்கு வர தயாராக இருப்பதோடு, மின்னணு முறை தகவல் பரிமாற்றத்தையும் ஏதுவாக வைத்திருக்க வேண்டும்.

*தலைமைச் செயலகத்தில் இருந்து மாவட்டம் மற்றும் கள அளவிலான அரசு அலுவலகங் கள், ஆணையங்கள், வாரியங் கள், அரசு கழகங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களும் இந்த வகையில் இயங்கும்.

*போலீஸ், மாவட்ட நிர்வாகம், அரசுக் கருவூலம், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் கடந்த மார்ச் 25-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைப் படி செயல்படும். அலுவலகத்துக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page