ஈரோடு, மே 18
ஈரோட்டிற்கு கடந்த மார்ச் மாதம் வந்த தாய்லாந்து பயணிகளுக்கு உதவி செய்ததாக கூறி 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் தொடக்கத்தில் கொரோனா பரவ டெல்லி மாநாடும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. டெல்லி மாநாடு சென்று தமிழகம் வந்த சில பேர் மூலம் தமிழகத்தில் கொரோனா பரவியது. ஆனால் டெல்லி மாநாடு சென்ற எல்லோரும் மொத்தமாக தமிழகத்தில் தாமாக முன் வந்து தகவல் கொடுத்தனர். இதனால் அவர்கள் மூலம் பெரிய அளவில் கொரோனா பரவவில்லை. அதோடு டெல்லி மாநாடு மூலம் சமூக பரவலும் ஏற்படவில்லை.
டெல்லி மாநாடு சென்ற தாய்லாந்து பயணிகள் பலர் தமிழகம் வந்தனர். முக்கியமாக கொங்கு மாவட்டங்களில் பலர் தங்கி இருந்தனர். இவர்கள் மூலம் கொங்கு மாவட்டங்களில் சிலருக்கு கொரோனா வந்தது. ஈரோட்டிலும் இதன் மூலம் சிலருக்கு கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களுக்கு வீடு கொடுத்து உதவிய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோட்டில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் 4 பேரும் சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள். அதன்படி தாய்லாந்து நாட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்து உதவியதாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இவர்கள் மீது 4 பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூரம்பட்டி காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். இதேபோல் அண்டை ஊர்களில் சிலரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக விரைவில் விசாரணை முடுக்கிவிடப்படும் என்றும் போலீசார் தரப்பு தெரிவிக்கிறது.