கொரோனா தாக்கினால் நீரிழிவு நோயாளிகள் பலியாக 50 சதவீதம் கூடுதல் வாய்ப்பு: மருத்துவ நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

Spread the love

கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு, மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா தாக்கினால், நீரிழிவு நோயாளிகள் மரணமடையும் வாய்ப்பு, மற்றவர்களை விட 50 சதவீதம் அதிகமாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் 70 சதவீதம்பேர், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, இதய பிரச்சினை ஆகியவற்றில் ஏதேனும் இருந்தவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்களும் இதே கருத்தை தெரிவித்துள்ளனர். டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியின் நாளமில்லா சுரப்பி துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டர் நிகில் டாண்டன் கூறியதாவது:-

கொரோனா தாக்கினால், நீரிழிவு இல்லாதவர்களை விட நீரிழிவு இருப்பவர்கள் பலியாவதற்கு 50 சதவீதம்வரை அதிக வாய்ப்பு உள்ளது.

உயர் ரத்த அழுத்தம், இதய பிரச்சினை, புற்றுநோய், சிறுநீரக கோளாறு ஆகிய நோய் கொண்டவர்களுக்கும் ஆபத்துதான்.

ஆகவே, நீரிழிவு நோய் இருப்பவர்கள், வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், தங்கள் ரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்தை பராமரித்துவர வேண்டும். மருந்துகளை சரியாக உட்கொள்ள வேண்டும். வீட்டிலேயே உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை அமைந்து, மனநலமும், உடல்நலமும் சீராகும் என்று அவர் கூறினார்.

டெல்லி மேக்ஸ் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரியின் நாளமில்லா சுரப்பி மற்றும் நீரிழிவு நோய் துறை தலைவர் டாக்டர் அம்பரிஷ் மித்தல் கூறியதாவது:-

நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதுதான், கொரோனா தடுப்புக்கு முதலாவது முன்னெச்சரிக்கை வழிமுறை.

அப்படி கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், சிகிச்சையை தீவிரப்படுத்த வேண்டும். டாக்டர்களிடம் தொலைபேசி மூலம் கூட ஆலோசனை பெறலாம். ரத்த சர்க்கரையை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. சர்க்கரை அதிகமாக இருந்தால், அதை வேகமாக கட்டுப்படுத்த இன்சுலின் பயன்படுத்த வேண்டும். அதற்கு தயங்கக்கூடாது என்று அவர் கூறினார்.

டைப் 1, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின்தான் சிறந்த மருந்து என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page