காவிரி டெல்டா குறுவை சாகுபடி:மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பு – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வதற்கு, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறித்து நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், ஆர்.துரைக்கண்ணு, தலைமைச் செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது, 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமான அளவு நீர் ஆகும். இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, டெல்டா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை ஏற்றும், மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி காலை 10 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரினை வேளாண் பெருமக்கள் திறம்பட பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கீழ்க்கண்ட அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு நான் வழங்கியுள்ளேன்.

டெல்டா பகுதிகளில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலம் ஏ மற்றும் பி பாசன வாய்க்கால்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் மூலம் சி மற்றும் டி பாசன வாய்க்கால்களும் விரைவாக தூர்வாரப்பட வேண்டும். பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அனைத்து டெல்டா மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறுவை சாகுபடிக்கு ஏற்ற குறுகிய கால நெல் ரக விதைகளை தேவையான அளவு இருப்பில் வைத்து விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும்.

கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் ஜூன் 12-ந் தேதிக்குள் நாற்று விட்டு, நடவுப் பணியினை முடிக்க வேளாண்மைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும். மேலும், கிணற்று நீர் வசதி இல்லாத விவசாயிகளின் நலனுக்காக, அந்தந்த கிராமத்தில் கிணற்று நீர் வசதியுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உதவியுடன், மே 3-வது வாரத்திலேயே தேவையான அளவு நாற்று விட்டு, ஜூன் மாதம் 3-வது வாரத்தில் வாய்க்காலில் நீர் வந்தவுடன் நிலம் தயார் செய்து, நடவுப் பணியினை மேற்கொள்ளும் வகையில் முன்கூட்டியே சமுதாய நெல் நாற்றங்கால் அமைப்பதற்கு வேளாண்மைத் துறை அலுவலர்கள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.

வேளாண் பெருமக்கள் குறுவை நெல் சாகுபடி பணியை மேற்கொள்வதற்கு தேவையான பயிர்க் கடன் வசதி பெறுவதற்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லாக் கடன் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும். மேலும், தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விவசாயப் பெருமக்களும், வேளாண் தொழிலாளர்களும் முக கவசம் அணிந்து, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளியினை பின்பற்றி சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 2.90 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு, 4.99 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் பெறப்பட்டது. நான் அறிவித்த அறிவிப்பின் மூலம் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, சுமார் 5.60 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது.

பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி மேற்கொண்டு உயர் விளைச்சல் பெற்றிட வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page