ராய்ப்பூர் : ‘கொரோனா’ வைரஸ் பரவலை தடுக்க, சத்தீஸ்கர் முழுதும், மேலும் மூன்று மாத காலத்திற்கு, 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 92 ஆக அதிகரித்துள்ளது. இதில், 59 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தில் அமலில் உள்ள, 144 தடை உத்தரவு, மேலும், மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சத்தீஸ்கரில் உள்ள, 28 மாவட்டங்களில் நிலவும் சூழல் குறித்து, அவற்றின் கலெக்டர்கள், மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில், வைரஸ் பரவும் அபாயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டும், கலெக்டர்களின் பரிந்துரைபடியும், 144 தடை உத்தரவு, மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.
நான்கு பேருக்கும் மேற்பட்டோர், பொது இடத்தில் கூடக்கூடாது. உணவகங்கள், ‘பார்கள், கிளப்கள்’ ஆகியவை மே, 31ம் தேதி வரை மூடி இருக்கும். விளையாட்டு வளாகங்கள் மற்றும் மைதானங்களை, அடுத்த உத்தரவு வரும் வரை, திறக்கக்கூடாது. தடை உத்தரவுகளை மீறி செயல்படுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.