கொரோனா பரவல் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணையை நடத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜெனீவா
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49லட்சத்தை கடந்த நிலையில், நோய் தொற்றால் 3 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.உலகம் முழுவதும் 19 லட்சத்துக்கும் அதிகமானபேர் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகர ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கு பரவச் செய்யப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இந்த வைரஸ் குறித்து ஆரம்பத்தில் பல தகவல்களை சீனா மறைத்ததாக சில தரப்பினரால் குற்றம்சாட்டப்பட்டது.
கொரோனா வைரஸ் எப்படி ஆரம்பித்தது மற்றும் பரவியது என்பது குறித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தீர்மானம் கொண்டுவந்தன.
இதுவரை இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்பட 116 நாடுகள் ஆதரவளித்துள்ளன. மொத்தம் 194 உறுப்பினர்கள் உள்ள இந்த அவையில், இத்தீர்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை.
இதற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த சீனா பின்னர் உலக நாடுகளின் அழுத்தத்துக்கு பணிந்து ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வந்து நிலைமை சீரான பிறகு விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும் என்றும் முதலில் மக்களைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவாதத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த பின் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் அதனோம் ஜெப்ரெயேசஸ், பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டார்.