ரூ.500 கோடி செலவில் சிறுசேரி சிப்காட் பூங்காவில் நவீன தரவு மையம் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Spread the love

சிறுசேரி சிப்காட் பூங்காவில் ரூ.500 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள நவீன தரவு மையத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வேகமாக வளர்ந்துவரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் சாதகமான புவியியல் சூழல், மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைந்துள்ளதால், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளங்குகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி ‘நேஷனல் பேமண்ட்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா’ (என்.பி.சி.ஐ.) நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சில்லரை பரிவர்த்தனைகள் முதல் வங்கிகளுக்கு இடையேயான பணத் தீர்வுகள் வரை அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும்.

நவீன தரவு மையம்

இந்த நிறுவனம் ஒவ்வொரு மாதமும் ரூ.400 கோடி பரிவர்த்தனைகளை கையாளுகிறது. இவற்றின் பொருளாதார மதிப்பு மாதத்திற்கு 15 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனம், சர்வதேச அளவில் மிகப்பெரிய பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்நிறுவனத்தின் மூலம், சர்வதேச தரத்தில் எட்டு அடுக்கு பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகளுடன் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த நவீன தரவு மையம் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதற்கு துணைபுரியும்.

டிஜிட்டல் முயற்சிகள்

செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் நான்கு அடுக்கு தரத்துடன், முதல் தரவு மையமாக இது அமைக்கப்படவுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தை செயல்படுத்துகிற அனைத்து விதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்த தரவு மையம் உதவிபுரியும்.

புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் வகையிலும் இத்தரவு மையம் அமைக்கப்படவுள்ளது.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தகவல் தொழில் நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, என்.பி.சி.ஐ. நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் என். ராஜேந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page