முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை,
கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் பால் சப்ளை, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. கடைகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. பஸ், ரெயில், விமான சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது. தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலாலை இன்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு அறிவித்த நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.
சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த ஜூன் 30ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, மார்ச் மற்றும் ஏப்ரல் வாடகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்று கொள்ள வேண்டும் என வீட்டு உரிமையாளர்களுக்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
முதியோருக்கான உதவி தொகை வீடுகளுக்கே வந்து வழங்கப்படும். மாதந்தோறும் 32 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வட்டாட்சியர், வங்கி மற்றும் தபால் ஊழியர்களுக்கு ஆட்சியர்கள் தக்க அறிவுரைகளை வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.