கொரோனா வைரஸ் வார்டில் நீச்சல் உடை அணிந்து வலம் வந்த நர்ஸ்: ரஷியாவில் வைரலானது

Spread the love

கவச உடைக்குள் நீச்சல் உடை அணிந்து கொரோனா வைரஸ் வார்டில் நர்ஸ் வலம் வந்த காட்சி, ரஷியாவில் வைரலாகி உள்ளது.

மாஸ்கோ,

ரஷிய நாட்டையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை. அங்கு தாமதமாகவும், மெதுவாகவும் பரவத் தொடங்கிய அந்த வைரஸ், இப்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அங்கு நேற்று மதிய நிலவரப்படி இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 2,900-ஐ தாண்டி இருக்கிறது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் நர்ஸ் பணிபுரிந்து வருகிறார்.

இப்போது ரஷியாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.

இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் ‘டூபீஸ்’ நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கொரோனா வைரஸ் வார்டில் பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.

இப்படி அவர் உடை அணிந்து, நோயாளிகளிடம் ஒரு தட்டில் மருந்துகள் எடுத்துச்சென்றார்

இதை யாரோ செல்போனில் நைசாக படம் பிடித்து இருக்கிறார். அந்த காட்சி, மாஸ்கோவில் இருந்து வெளிவருகிற ‘துல்ஸ்கி நோவாஸ்டி’ பத்திரிகையில் வெளியானது. அதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மின்னல் வேகத்தில் பரவியது.

நர்ஸ் இப்படி ஒரு உடையில் வலம் வந்ததை கொரோனா வைரஸ் நோயாளிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் ரஷியா முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.

அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு மலை போல குவிந்தது.

ஒருவர் சமூக வலைத்தளம் ஒன்றில், “சரியாக செய்திருக்கிறார். அவர் தன் உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறார். அவருக்கு யாரும் நன்றி சொல்லவில்லை. ஆனால் கண்டிக்க வந்து விட்டார்கள்….” என்று கூறி உள்ளார்.

இன்னொருவர், “நர்ஸ் தனக்கு சவுகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி உடை அணிந்துள்ளார். யாரிடமும் காட்டிக்கொண்டிருப்பதற்கு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவரோ, “எதற்காக எல்லோரும் ஓலமிடுகிறீர்கள்? கடும் வெப்பம் காரணமாக அவர் இப்படி உடை அணிந்தார் என்ற உண்மையை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இந்த வெப்ப சூழ்நிலையில் இப்படித்தான் வேலை செய்ய முடியும் என்று அவர் காட்டி இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page